2018-05-08 16:02:00

வெனெசுவேலா புலம்பெயர்ந்த மக்களுக்கு திருஅவை ஆதரவு


மே,08,2018. ஏழ்மை மற்றும், பசி பட்டினியால் அண்டை நாடுகளுக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான வெனெசுவேலா மக்களுக்கு, தென் அமெரிக்க தலத்திருஅவைகள், அத்தியாவசிய மற்றும் ஆன்மீக உதவிகளையும் வழங்கி வருகின்றன.

வெனெசுவேலா நாட்டிலிருந்து வறுமையினால் வெளியேறும் மக்களுக்கு, ஆதரவளிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், தென் அமெரிக்காவிலுள்ள கத்தோலிக்கத் தலைவர்கள், ஒருமைப்பாட்டுப் பாலங்கள் என்ற தலைப்பில் திட்டம் ஒன்றை உருவாக்கி, வெனெசுவேலா மக்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.  

வெனெசுவேலா நாட்டின் புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவும், இந்த ஈராண்டு மேய்ப்புப்பணி திட்டம் குறித்து, இத்திங்களன்று வத்திக்கானில் செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் முன்னாள் அரசுத்தலைவர் Hugo Chavez அவர்கள், 1999ம் ஆண்டில், பொதுவுடைமை புரட்சி என்ற பெயரில் ஆரம்பித்த நடவடிக்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர்.  தற்போதைய அரசுத்தலைவர் நிக்கோலாஸ் மதுரா அவர்களின் ஆட்சியிலும், இந்நெருக்கடி நிலைகள் தொடர்கின்றன. மக்கள் பெருமளவில், வறுமையாலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையாலும் துன்புறுகின்றனர். அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள், தொடர்ந்து கைதுசெய்யப்படுகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், ஏறக்குறைய பத்து இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். அண்டை நாடான கொலம்பியாவில் மட்டும், 25 இலட்சம் மக்கள் அடைக்கலம் தேடியுள்ளனர்.

வெனெசுவேலா, உலகில் அதிகமாக பணவீக்கத்தைக் கொண்டுள்ள நாடாகவும் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.