2018-05-08 16:01:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – 38 ஆண்டு வேதனையின் முடிவு - 2


38ஆண்டுகள் நோயுற்றுக் கிடந்த ஒருவரை இயேசு அணுகி, "நலம்பெற விரும்புகிறீரா?" என்று கேட்டது, வியப்பைத் தருகிறது என்று சென்ற விவிலியத்தேடலை நிறைவு செய்தோம். பசியில் இருக்கும் ஒருவரிடம், "சாப்பிட விரும்புகிறீரா?" என்றும், உறங்கிக்கொண்டிருக்கும் ஒருவரை எழுப்பி, "உறங்க விரும்புகிறீரா?" என்றும் கேட்பதுபோல், இயேசுவின் இக்கேள்வி அமைந்துள்ளது. ஆனால், மற்றொரு கோணத்தில் இயேசுவின் கேள்வியை, சில விவிலிய விரிவுரையாளர்கள் சிந்தித்துள்ளனர். அவர்களது சிந்தனைகளை நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.

38 ஆண்டுகளுக்கு முன் அம்மனிதர், தன் நோயுடன், பெத்சதா குளத்தருகே வந்து சேர்ந்தார். அவர் அங்கு வந்து சேர்ந்தார் என்று சொல்வதற்குப்பதில், அங்கு ஆதரவின்றி விடப்பட்டார் என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது. அவர் அங்கு விடப்பட்ட சில நாள்களில், அவர் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட சிலர், அவருக்கு உணவும், பணமும் கொடுத்திருக்கலாம். நாள்கள் செல்ல, செல்ல, ஆண்டுகள் உருண்டோட, அவரது பரிதாப நிலையினால், அவருக்கு வந்து சேர்ந்த ஆதாயங்களுக்கு அவர் பழகிப்போயிருக்கலாம். ஒருவேளை, அவற்றில் சுகம் காணவும் ஆரம்பித்திருக்கலாம். அத்தகைய நிலையிலிருந்து  அவரை விழித்தெழச் செய்வதற்கே, இயேசு, "நலம்பெற விரும்புகிறீரா?" என்ற கேள்வியை அவரிடம் விடுத்தார் என்று விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.

தங்கள் பரிதாப நிலையை, பார்வைப்பொருளாக்கி, தர்மம் கேட்கும் சிலரை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. அவர்களது பரிதாப நிலை அவர்களுக்கு ஆதாயமாக மாறும் வேளையில், அதிலிருந்து வெளியேறத் தயங்குவர். நமது நகரங்களில் தர்மம் கேட்கும் சிலரிடம், அவர்களை ஏதாவது ஒரு வேலையில் சேர்த்துவிடுவதாகச் யாராவது சொல்லும்போது, தர்மம் கேட்பவர்கள், அவர்களிடமிருந்து விலகிச்செல்வதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், அதே நேரத்தில், உடல் குறையுள்ள பல்லாயிரம் பேர், சாதனைகள் புரிந்துள்ளதையும் இங்கு சிந்திக்கவேண்டும். இவர்கள், தங்கள் பலமற்ற நிலையை, பரிதாபத்தைச் சம்பாதிக்கும் காட்சிப் பொருளாக்காமல், அதே நிலையை வைத்து, சாதனைகள் புரிந்துள்ளதை இவ்வேளையில் எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. இந்தியாவில், கம்லேஷ் படேல் என்ற இளைஞர் தன் இரு கரங்களைக்கொண்டு ஆடும் திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவிலும், உலக அரங்கத்திலும் 1,500க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். பல போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலத்தின், பரோடாவில் பிறந்த கம்லேஷ், ஐந்து வயது சிறுவனாய் இருந்தபோது, அவனுக்குக் காய்ச்சல் வந்தது. அவனது தந்தை மருத்துவமனைக்கு கம்லேஷை அழைத்துச் சென்றார். அங்கு கொடுக்கப்பட்ட தவறான மருந்து, தவறான வழியில் குத்தப்பட்ட ஊசி இவையிரண்டும் சேர்ந்து, கம்லேஷை, அவரது இடுப்புக்குக் கீழ், உணர்விழந்து வாழ வைத்து விட்டன. அவரது இரு கால்களும் வலுவிழந்து, செயலிழந்து போயின. 35 வயதான கம்லேஷ் அவர்கள், தற்போது தன் கைகளையே கால்களாக்கி நடனமாடிவருகின்றார். அவரது திறமையை, இந்தியா மட்டுமல்ல, இன்னும் பல நாடுகள் வியந்து பாராட்டியுள்ளன.

கம்லேஷ் அவர்களின் நடனத் திறமையைக் கண்டு வியக்கும் நாம், அவர் தொலைக்காட்சியில் அளித்துள்ள பேட்டிகளைக் கேட்டு இன்னும் வியக்கிறோம், பாடங்களைப் படிக்கிறோம். கம்லேஷ் அவர்கள் சொல்லும் அழகான எண்ணங்கள் இவை: "உடலில் குறையுள்ளவர்களுக்கு நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை நான் உடல் குறையுடன் இருந்து சொல்ல வேண்டும் என்பது, கடவுளின் விருப்பம் என்று நினைக்கிறேன். மன உறுதிக்கும், விடா முயற்சிக்கும் முன் உடல் குறைகள் இல்லாமல் போய்விடும் என்பதுதான், நான் உலகிற்கு, முக்கியமாக, இந்தியாவுக்குத் தரக்கூடிய நல்ல செய்தி... நடனம் ஆட, இரு கால்கள் வேண்டும் என்று சொல்வார்கள். எனக்கோ, நடனம் ஆட கால்கள் இல்லை. ஆனால், கடவுள் நம்பிக்கை இருக்கிறது."

கம்லேஷ் ஆடும் நடனத்தைப் பார்ப்பவர்களை அதிகம் பாதிக்கும் ஒரு விடயம் என்ன தெரியுமா? அவர் தன் செயலிழந்த, வளர்ச்சி அடையாத கால்களைப் பயன்படுத்தும் விதம். தன் கைகளின் வலிமையால் நடனமாடும் கம்லேஷ், துவண்டு போய், துணிபோல் கிடக்கும் தன் கால்களை தோள் மீது சுற்றிப் போட்டுக்கொண்டு நடனம் ஆடுகிறார்.

இந்தியாவில் தோளைச் சுற்றித் துண்டு போடும் பழக்கம் உள்ளது. ஒருவரது பெருமையை, அந்தஸ்தை நிலை நாட்டும் பழக்கம் அது. நம் அரசியல்வாதிகள் இந்தப் பழக்கத்தை வித்தியாசமாகப் பயன்படுத்தி, அந்தப் பழக்கத்தையே கேலிக்குரியதாய் மாற்றிவிட்டதை இப்போது நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும், இந்தப் பழக்கம், மரியாதையை வலியுறுத்தும் ஒரு பழக்கமாக நம் மத்தியில் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

கம்லேஷ் அவர்கள், தன் துவண்டுபோன கால்களை, தோளைச் சுற்றி போட்டுக்கொள்ளும்போது, தன்னிடம் குறையென்று பிறர் கருதும் அந்தக் கால்களே தன் பெருமையை, மரியாதையை உலகறியச் செய்யும் அடையாளம் என்று, அவர் சொல்வது போல் இருக்கிறது.

உடலில் குறையுள்ள அங்கங்களை, மக்கள் முன் காட்டி, மக்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து, தர்மம் கேட்கும் பல கோடி மக்களைத் தினமும் சந்திக்கிறோம். நாம் குறைகள் என்று கருதுவதை கம்லேஷ் படேல் போன்றோர், மக்கள்முன், அதுவும், ஆயிரக்கணக்கான மக்கள்முன், மேடையேறி காட்டுகின்றனர். ஆனால், அவற்றைக் குறைகள் என்று காட்டவில்லை. நமது பரிதாபத்தைப் பெறுவதற்காகக் காட்டவில்லை. அந்தக் குறைகளே தங்கள் நிறைகள்; மாற்றுத் திறமைகள், தங்களது வெற்றியின் படிகற்கள் என்று உலகறியச் செய்துள்ளனர்.

பரிதாபத்தை மூலதனமாக்கி, தர்மம் கேட்பதை ஒரு தொழில்போல செய்துவரும் மனசாட்சியற்ற மக்களையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம். மற்றவர்களின் பரிதாப நிலையை மூலதனமாக்கி, அவர்கள் தர்மம் கேட்டு பெறும் பணத்தின் பெரும் பகுதியை ஒவ்வொருநாளும் திரட்டி, ஒரு சிலர் நடத்தும் தொழில், ஒவ்வொரு பெரு நகரங்களிலும் பரவியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில், குழந்தைகள் கடத்தப்பட்டு, ஊனமாக்கப்பட்டு, அவர்கள் பிச்சையெடுத்து கொணர்வதை வைத்து சுகமான வாழ்க்கை நடத்தும் அரக்கர்களையும் இவ்வேளையில் நினைத்து, அவர்களின் மனமாற்றத்திற்காக செபிக்கலாம்.

பெத்சதா குளத்திற்குத் திரும்புவோம். இயேசு, தானாகவே வலியச்சென்று நோயுற்றவரைச் சந்தித்தது, ஒரு சில சிந்தனைகளை எழுப்புகிறது. பொதுவாக, நோயுற்றவரோ, அல்லது, அவரைச் சார்ந்தவர்களோ இயேசுவிடம் வந்து விண்ணப்பிக்கும் வேளையில், இயேசு புதுமைகளை ஆற்றியுள்ளார். ஆனால், ஒரு சில வேளைகளில் மட்டுமே, யாரும் விண்ணப்பிக்காத வேளையில், தானாகவே முன்வந்து இயேசு மக்களைக் குணமாக்கியிருக்கிறார்.

நயீன் நகர் கைம்பெண்ணின் மகன் இறந்ததும், அவரது உடலைப் புதைக்கச் சென்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தை நிறுத்தி, இயேசு அவ்விளையவரை உயிர்ப்பிக்கிறார். யாரும், எந்த விண்ணப்பமும் தராதபோது, இந்தப் புதுமை நிகழ்ந்தது. ஆதரவு ஏதுமற்ற நிலையில் விடப்பட்ட அந்த கைம்பெண்ணின் மீது பரிவு கொண்டு இயேசு இதைச் செய்தார் என்று, லூக்கா நற்செய்தியில் (லூக்கா 7:13) நாம் வாசிக்கிறோம். அதேபோல், கைசூம்பியவர் ஒருவரை, தொழுகைக்கூடத்தில், இயேசு குணமாக்கும் நிகழ்வும் (மத். 12; மாற். 2; லூக். 6), யாருடைய விண்ணப்பமும் இல்லாமல் நிகழ்ந்தது. இந்தப் புதுமை, ஒய்வு நாளில் குணமாக்கலாமா என்ற கேள்விக்கு, இயேசு செயல்வடிவில் தந்த பதிலாக அமைந்தது. கைசூம்பியவரின் நிலையைக் கண்டு, பரிவினால் உந்தப்பட்டு, இயேசு இந்தப் புதுமையைச் செய்தார். அதே பரிவு, இயேசுவை, பெத்சதா குளத்தருகே படுத்துக்கிடந்த நோயாளியிடம் சேர்த்தது.

எந்த ஓர் அழைப்போ, விண்ணப்பமோ இன்றி, அம்மனிதரை இயேசு தேடிச் சென்றிருந்தாலும், அவரது விருப்பமின்றி, அவருக்கு குணமளிக்க இயலாது என்பதால், அவரது விருப்பத்தை அறிந்துகொள்ள, "நலம்பெற விரும்புகிறீரா?" என்று கேட்டார். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், தன்னிடம், இவ்வாறு கேட்டதும், நோயுற்றவர் அவரை அதிர்ச்சியுடன் சில நொடிகள் பார்த்திருக்கவேண்டும். "ஆம் விரும்புகிறேன்" என்று தெளிவாக, உறுதியாக மறுமொழி சொல்வதற்குப் பதில், அவர் மீண்டும் தன் இயலாமையையும், தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்ற பரிதாபத்தையும் பற்றி பேசுகிறார்.

இறந்தகாலத்தை இறக்கிவைக்க இயலாமல் தவித்த அந்த நோயாளிக்கு, இயேசு குணமளித்ததையும், அதைத் தொடர்ந்து, அவருக்கு நிகழ்ந்த பிரச்சனைகளையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.