2018-05-08 15:48:00

இமயமாகும் இளமை - இறைவாக்கினர்களின் வாரிசுகள்


அந்தக் கல்லூரி மாணவரின் பெயர் இரவி. பெற்றோர் யாரென்று தெரியாமல், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை நல்ல முறையில் முடித்துவிட்டு, கல்லூரியில் காலடி வைத்திருந்தார். பட்டப்படிப்புக்குப் பின், ஐ.ஏ.எஸ். படித்து, அரசுப்பணியில் சேர்ந்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு பணியாற்றவேண்டுமென்ற உறுதியுடன் படித்துக் கொண்டிருந்தார். படிப்பு நேரம் போக, மற்ற நேரங்களில், சமுதாயப் பணிகளும் செய்து வந்தார்.

ஒருநாள், தலையிலும், கையிலும் கட்டுகளுடன், இரத்தக்காயங்களுடன் வந்துகொண்டிருந்த இரவியை, கல்லூரி வாசலில் சந்தித்தார், அவரது ஆசிரியர். காரணம் கேட்டார். இரவி அவரிடம், "சார், நான் பஸ்ல காலேஜுக்கு வரும்போது, மூணு இளைஞர்கள், பெண்கள் அமர்ந்திருந்த பக்கம் நின்றபடி, சொல்லத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, பெண்களைக் கேலி செஞ்சாங்க. அவங்க செய்றது சரியில்லன்னு நான் சொன்னேன். அதனால, கைகலப்பு வந்துச்சு. அவங்க மூணு பேர், நான் தனி ஆள். அடிபட்டுடிச்சி" என்றார். ஆசிரியர் அவரிடம், "இரவி, உனக்கு ஏன் இந்த வம்பு?" என்ற வழக்கமான பல்லவியுடன் பேச ஆரம்பித்தார். இரவியோ, "சார், தப்புன்னு தெரிஞ்சா, அதைத் தட்டிக்கேக்கணும். தட்டிக்கேக்க ஆள் இல்லன்னு தெரிஞ்சா, தப்பு கூடிகிட்டே போகும்" என்றார்.

தனி ஆளாய் இருக்கும்போது, தட்டிக்கேட்பதில் உள்ள ஆபத்துக்களை அவருக்குப் புரியவைக்க முயன்றார் ஆசிரியர். அப்போது இரவி சொன்னது, ஆசிரியருக்கு பாடமாக அமைந்தது. "சார், நான் பிறந்ததிலிருந்தே தனி ஆள். எனக்குன்னு சொந்தம் எதுவும் இல்ல. தனி ஆளா இருக்குறது ஆபத்துன்னு நீங்க சொல்றீங்க. தனி ஆளா இருக்குறதுல ஒரு தனி சுதந்திரம், பலம் இருக்குறதா நான் பாக்குறேன். என்னை அவுங்க அடிச்சுக் கொன்னாலும் ஏன்னு கேக்க யாரும் கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனால், அப்படியே சாவுறதா இருந்தாலும், நல்லது செஞ்சுட்டு சாவுறோம்கிற திருப்தி எனக்குப் போதும்" என்று இரவி சொன்னார்.

இறைவாக்கினராய் வாழ்வது சவால்கள் நிறைந்த வாழ்க்கை. கூட்டமாய் ஒரு பாதையில் உலகம் சென்ற வேளையில், எதிர் சாட்சிகளாய், இறைவாக்கினர்கள், தனிப்பாதையை வகுத்துக்கொண்டு, வாழ்ந்தனர் என்பது, நமக்குத் தெரியும். 'நமக்கேன் வம்பு?' என்ற மனநிலையுடன், ஆயிரம் பேர் ஒதுங்கிக்கொள்ளும்போது, தனி ஆளாய் இருந்தாலும், தப்பைத் தட்டிக்கேட்கத் துணிந்த இரவி போன்றோர், இன்றைய உலகில், நம்முடன் வாழும், இறைவாக்கினர்களின் வாரிசுகள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.