2018-05-07 16:59:00

நவீன அடிமை முறைகள் குறித்து கை கழுவ அனுமதியில்லை


மே,07,2018. அர்ஜென்டினாவின் புவனஸ் அயிரஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ பெருமறைமாவட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தற்கால அடிமை முறைகள்' என்ற கருத்தரங்கிற்கு, ஒலி-ஒளி செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித உயிர்களை விற்பனைப் பொருட்களாக கடத்திச் செல்லுதல், மக்களை கடனாளியாக்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டுதல், குழந்தைகளை ஏமாற்றுதல், பாலுறவு முறையில் கொடுமைகளை இழைத்தல், கட்டாய வேலை வாங்குதல் என இன்றைய உலகில் எண்ணற்ற வகையில் அடிமை முறைகள் காணப்படுகின்றன என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் 4 கோடி பேர் அடிமைத் தொழிலில் துன்புறுவதாக கவலையை வெளியிட்டுள்ளார்.

மனித குலத்திற்கு எதிராக இடம்பெறும் இத்தீமை குறித்து எவரும் தங்கள் கைகளை கழுவிடமுடியாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தீமையின் முகத்திரை கிழிக்கப்படுவதோடு, பாராமுகம் எனும் போக்கு சமுதாயத்திடமிருந்து அகற்றப்படவேண்டும் என கேட்டுள்ளார்.

நமக்கு முன்னிருக்கும் இத்தீமையை பார்க்க மறுத்து, இரட்டை வேடம் போடுவது, நாம் இதில் குற்றமற்றவர் என ஒதுங்கிச் செல்வது என்பவை அனுமதிக்கப்படாதவை எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.