2018-05-07 17:04:00

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய ஆயர்கள் உதவி


மே,07,2018. மணல் சூறாவளி காற்றாலும், மழையாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடமாநிலங்களில், உடனடி அவசரச் சேவைகளைத் துவக்கியுள்ள தலத்திருஅவை, தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் குறித்து, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துள்ளது, என அழைப்பு விடுத்துள்ளது.

வட இந்தியாவின் இராஜஸ்தான், உத்திரபிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் பெருமழை குறித்து எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென அவசரகால உதவிகளை 'காரித்தாஸ் இந்தியா' துயர் துடைப்பு நிறுவனம் வழியாக துவக்கியுள்ள இந்திய ஆயர் பேரவை, மணல் சூறாவளியாலும், பெரு மழையாலும் உயிரிழந்துள்ள ஏறத்தாழ 124 பேர், மற்றும், காயமடைந்துள்ள 300 பேர் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செப உறுதியையும் வழங்கியுள்ளது.

மதம், இனம் என்ற எவ்வித பாகுபாடும் பார்க்காமல், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கத்தோலிக்க சுயவிருப்பப் பணியாளர்கள் சேவையாற்றி வருவதாகக் கூறும் இந்திய ஆயர்கள், தட்பவெப்ப நிலையின் அசாதாரண மாற்றங்கள் குறித்து நல் மனம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து சிந்திக்க வேண்டியுள்ளது எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.