2018-05-05 16:13:00

தேநீர் கடை நடத்திக்கொண்டு தடகளத்தில் சாதிக்கும் பெண்


மே05,2018. கோவையைச் சேர்ந்த கலைமணி எனப்படும் தாய் ஒருவர், சாலையோரத்தில், சாதாரண தேநீர் கடை நடத்திக்கொண்டு, தடகளத்தில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என,  நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கலைமணி அவர்கள், திருமணத்திற்குப் பிறகு, தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கோவையில் வாழ்ந்து வருகிறார்.

பள்ளிக்காலம் முதலே தடகளத்தில் ஆர்வம் காட்டிய கலைமணி அவர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு, தடகளம் ஆகிய இரண்டையும் தொடர முடியாதநிலையில்,  

கணவரின் உதவியோடு, தனது 35வது வயதில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கியுள்ளார்.

இயல்பாகவே ஓட்டத்திறமை பெற்றிருந்த கலைமணி அவர்கள், போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தது முதலே வெற்றியைக் கண்டார். 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்தில் மூத்தோர் பிரிவில் பங்கேற்று, அனைத்துப் போட்டிகளிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

குடும்பச் சூழ்நிலையும் வறுமையும் பயிற்சிக்குத் தடையாக இருந்ததால், வருமானத்திற்காக, கோவை செல்வபுரம் பகுதியில் ஒரு சாதாரண தேநீர் கடை ஒன்றைத் துவக்கி நடத்தி வருகிறார் இவர்.

அதிகாலை ஓட்டப்பயிற்சியை முடித்துவிட்டு தேநீர் கடை பணியைத் துவங்கிவிடும் இவர், சந்தைக்குச் செல்வது, தண்ணீர் சுமப்பது, தேநீர் கடையைப் பார்த்துக்கொள்வது போன்ற பணிகளை முடித்துவிட்டு, மாலையில் கணவரை கடையில் விட்டுவிட்டு, மீண்டும் பயிற்சியை ஆரம்பித்து விடுவார் என செய்திகள் கூறுகின்றன.

சூழ்நிலை காரணமாக சிறு வயதில் சாதிக்க முடியாததை இப்போது சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க நினைப்பதாகக் கூறும், 45 வயது நிரம்பிய இவர், மூத்தோர் தடகளப் பிரிவில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார். 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.