2018-05-05 14:38:00

இமயமாகும் இளமை: பள்ளிக் குழந்தைகளைக் காக்க பலியான இளையவர்


சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில், பல பள்ளிக் குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த ஓர் இளைஞர், அக்குழந்தைகள் அனைவரையும் காப்பாற்றினார். எரியும் நெருப்புக்குள் பலமுறை சென்று, குழந்தைகளைக் காப்பாற்றியவர், இறுதியில், அந்தப் புகை மண்டலத்தில் மூச்சு முட்டி, மயங்கி விழுந்து, தீயில் கருகி இறந்தார்.

அந்த இளைஞருக்கும், அவரால் காப்பாற்றப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள் தன் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில், அவர் அந்தத் தியாகச்செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஓர் உந்துதலால், அவர் இந்த உன்னதச் செயலைச் செய்தார்.

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்று இயேசு சொன்னதன் முழுப் பொருளை உலகிற்கு உணர்த்தியுள்ளார், அந்த இளைஞர். அதாவது, அறிமுகம் ஏதுமற்ற பள்ளிக்குழந்தைகளும் தன் உறவே என்ற உண்மையை உணர்த்த, அவர்களுக்காக தன் உயிரை அந்த இளைஞர் இழந்தார். அந்த இளைஞரைப் போன்று, பல தியாக உள்ளங்கள், அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.