2018-05-04 15:02:00

நல்ல ஆயர் தன் மந்தை மீது எப்போதும் கவனமுடன் இருப்பார்


மே,04,2018. ஆயர்கள், தங்களின் மறைமாவட்ட மக்களின் வாழ்வில் ஈடுபட்டு, அவர்களுக்கு நெருக்கமாக இருந்து, அம்மக்களை ஓநாய்களிடமிருந்து பாதுகாப்பதற்கு எப்போதும் விழிப்பாய் இருக்குமாறு, இவ்வெள்ளிக்கிழமை காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளிக்கிழமை காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, அந்தியோக்கிய கிறிஸ்தவ சமூகத்தில் ஏற்பட்ட இன்னலான தருணம் குறித்து விளக்கும், இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

தன் மறைமாவட்ட மக்களின் விசுவாசத்தைக் காத்து, அதில் அவர்களை உறுதிப்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள ஆயர்களின் பணி பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில், ஆடுகளின் பாதுகாவலர்கள் குறையாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

“எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால், உங்களது மனதைக் குழப்பி கலக்கமுறச் செய்தனர் எனக் கேள்விப்பட்டோம்” என்று, திருத்தூதர்கள் கூறியதை முதல் வாசகத்தில் வாசித்தோம் என்றுரைத்த திருத்தந்தை, தங்களை உண்மையான கிறிஸ்தவ இறையியலாளர் என நம்புவோர், இறைமக்களைக் குழப்பி விடுகின்றனர் என்று கூறினார்.

ஆயர்கள் மிகவும் கவனமுடன் இருந்து, ஓநாய்களிடமிருந்து தங்களின் மந்தைகளைக் காக்க வேண்டும் என்றும், ஓர் உண்மையான ஆயர், தன் ஒவ்வோர் ஆட்டின் பெயரையும் அறிந்துள்ளார் என்றும், இவ்வாறு இயேசு ஆயராக இருந்தார் என்றும், மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்கள் ஆடுகளைப் பாதுகாக்கும் நல்ல மேய்ப்பர்களை ஆண்டவர் எப்போதும் நமக்கு அருளுமாறு செபிப்போம், நல்ல ஆயர்கள் இன்றி நாம் முன்னோக்கிச் செல்ல இயலாது என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.