2018-05-04 15:18:00

சுவிஸ் கார்ட்ஸ் வீரர்களுக்கு திருத்தந்தை நன்றியும் பாராட்டும்


மே,04,2018. பேதுருவின் வழிவருபவருக்கும், திருப்பீடத்திற்கும், வத்திக்கான் நகரத்திற்கும், விலைமதிப்பில்லா சேவையாற்றிவரும், சுவிஸ் கார்ட்ஸ் வீரர்களுக்கு, தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 06, இஞ்ஞாயிறன்று, புதிதாகப் பணியில் சேரவிருக்கும், சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஏனையோரை, இவ்வெள்ளிக்கிழமை நண்பகலில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் தங்களின் பணிகளைச் சிறப்பாக ஆற்றுவதற்கு, கிறிஸ்துவோடு நிலையான உறவு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இந்த மெய்க்காப்பாளர்கள் போன்ற இளையோர், பிறரின் தேவைகளுக்கு எப்போதும் திறந்த மனதாய் இருந்து உதவிசெய்வதைப் பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இந்த மெய்க்காப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் மிகத் திறமையோடும், கட்டுக்கோப்போடும், அமைதியாகவும் ஆற்றுவதை, வியந்து பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியுடன் வாழ்வது, இயேசுவோடு நட்புறவிலும், திருஅவை மீது அன்பிலும் நிலைத்திருப்பது, அன்றாட பெரிய, சிறிய மற்றும் தாழ்மையான பணிகளை மகிழ்வுடனும், அக்கறையுடனும் செய்வது, ஒவ்வொருவரோடும் மனத்தாராளம் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வது ஆகியவை, திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையர் மற்றும் வத்திக்கான் நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள் அமைப்பு, 1506 ஆண்டில் திருத்தந்தை 2ம் ஜூலியஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. 19க்கும், 30 வயதுக்கும் உட்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டு கத்தோலிக்க இளையோர், ஒவ்வோர் ஆண்டும் மே 06ம் நாளன்று இந்த அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டு இராணுவத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.