2018-05-04 15:09:00

அர்ப்பண வாழ்வுக்கு செபம், ஏழ்மை, பொறுமை அவசியம்


மே,04,2018. திருப்பீட அர்ப்பண வாழ்வு பேராயம் நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும், 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, இவ்வெள்ளிக்கிழமை காலையில், அருளாளர்  திருத்தந்தை  ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, அந்நேரத்தில் தன் மனதில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கு, செபம், ஏழ்மை, பொறுமை ஆகியவை, மூன்று முக்கிய தூண்களாக அமைந்துள்ளன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ப்பண வாழ்வில் செபம் எப்போதும் முதலிடத்தைப் பெறுகின்றது என்றும், தன் சொந்த அல்லது தான் சார்ந்துள்ள சபையின் நலன்களுக்காக அல்லாமல், ஆண்டவருக்காகப் பணியாற்றுவதற்கு, செபம் உதவுகின்றது என்றும் கூறினார்.

இரண்டாவதாக, ஏழ்மை பற்றிப் பேசிய திருத்தந்தை, ஏழ்மை அன்னையாகும், இதுவே அர்ப்பண வாழ்வுக்கு தூணாக இருந்து தாங்குகின்றது என, புனித இஞ்ஞாசியார் ஏழ்மை பற்றி எழுதியுள்ளார் என்று கூறினார். ஏழ்மை இன்றி அர்ப்பண வாழ்வு வளமை பெறாது என்றும், இது தூணாக இருந்து வாழ்வைப் பாதுகாக்கின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, சாத்தான் ஏழ்மைக்கு எதிராக நம்மைச் சோதிக்கலாம், ஆயினும், துறவு வாழ்வில் ஏழ்மை உணர்வு நம்மில் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அடுத்து, குழு வாழ்வுக்கு பொறுமை மிகவும் அவசியம் என்றும், பொறுமையின்றி ஆண்டவரைப் பின்செல்ல இயலாது என்றும் கூறியத் திருத்தந்தை, இறையழைத்தல் குறைந்து வருவது குறித்து ஒவ்வொரு நாளும் கவலையோடு எழுப்பப்படும் முறையீடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

உரோம் அந்தோணியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், மே 03, இவ்வியாழனன்று, ஆரம்பித்த கருத்தரங்கில், உலகின் பல பகுதிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட இருபால் துறவியர் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.