2018-05-04 15:40:00

மியான்மாரின் கச்சின் பகுதியில் அமைதி, நீதிக்கு ஆயர்கள்


மே,04,2018. சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் நாட்டின், கச்சின் மாநிலத்தில் அமைதி மற்றும் நீதி நிலைபெறுமாறு, அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அத் லிமினா சந்திப்பிற்காக உரோம் நகர் வந்துள்ள மியான்மார் ஆயர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், மியான்மாரின் பெரும்பான்மை புத்த மதத்தினருக்கும், அந்நாட்டின் பல்வேறு இனக் குழுக்களுக்கும் இடையே அமைதியும், ஒப்புரவும் நிலவ தாங்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவித்தனர்.

நாட்டின் வட பகுதியில், கச்சின் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற, Myitkyina ஆயர் Francis Daw Tang அவர்கள் பேசுகையில், amber சுரங்கப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டுமென்று, ஓராண்டுக்கு மேலாக இராணுவம் கட்டளையிட்டு வருகின்றது என்று கூறினார்.

ஆயினும், இராணுவம் தற்போது எல்லைப்புறத்தில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது என்றும், கொஞ்சம் கொஞ்சமாக இராணுவம் அப்பகுதியில் நுழைந்து, பூர்வீக மக்கள், சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட, அப்பகுதியிலிருந்து குடிமக்களை வெளியேற வேண்டுமென்று வற்புறுத்தி வருகின்றது என்றும், ஆயர் Tang அவர்கள் கூறினார்.

பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன, சிலர் அங்கிருந்து தப்பித்துள்ளனர், ஆயினும் பலர் அடர்ந்த காடுகளில் ஏறக்குறைய மூன்று வாரங்களாகத் தங்கியுள்ளனர், இவர்களுக்கு உணவோ, மருத்துவ உதவிகளோ எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார், ஆயர் Tang. மியான்மார் ஆயர்கள் வருகிற திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.