2018-05-04 15:24:00

ஜெர்மன் ஆயர்கள் கருத்தொருமித்த தீர்வைக் காண்பார்கள்


மே,04,2018. “மனதிலும் உடலிலும் துன்புறும் மக்களுக்கு பிறரன்புப் பணிகளை மகிழ்வோடு ஆற்றுவது, நற்செய்தியை மிகச் சிறப்பாக வாழும் வழியாகும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியானது.

மேலும், கத்தோலிக்கருக்கும், கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைபெறும் திருமணங்களில், கத்தோலிக்கர் அல்லாதவர், திருநற்கருணை வாங்குவதற்கு அனுமதிப்பது குறித்து, சில திருப்பீட தலைமையக அதிகாரிகளுக்கும், சில ஜெர்மன் ஆயர்களுக்கும் இடையே, மே 03, இவ்வியாழக்கிழமை வத்திக்கானில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றி, அறிக்கை வெளியிட்டுள்ளது, திருப்பீட தகவல் தொடர்பகம்.

ஜெர்மன் ஆயர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்புக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பது குறித்து திருத்தந்தை பாராட்டுவதாகவும், ஜெர்மன் ஆயர்கள் எல்லாரும், இவ்விவகாரத்திற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வில், கருத்தொருமித்த தீர்வைக் காண்பார்கள் என திருத்தந்தை நம்புகின்றார் எனவும், திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர், இயேசு சபை பேராயர் லூயிஸ் லதாரியா அவர்கள், ஜெர்மன் ஆயர்களிடம் கூறியுள்ளார்.

உலகளாவிய திருஅவைக்கும், அதன் ஆட்சிக்கூறுக்கும் ஒத்த வகையில், விசுவாசம் மற்றும் மேய்ப்புப்பணிக்கு இடையிலான உறவு உட்பட, பல்வேறு மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்கள், இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன எனவும், இக்கூட்டத்தில் நிகழ்ந்தவை பற்றி தான் திருத்தந்தைக்கு அறிவிக்கவிருப்பதாகவும், பேராயர் லதாரியா அவர்கள் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில், ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவரும், Munchen மற்றும் Freising பேராயருமான கர்தினால் Reinhard Marx, கொலோன் பேராயர் கர்தினால் Rainer Maria Woelki, ஜெர்மன் ஆயர் பேரவையின் விசுவாசக் கோட்பாட்டு பணிக்குழுத் தலைவர், அதன் செயலர், கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுத் தலைவர் போன்றோர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.