2018-05-03 15:04:00

இமயமாகும் இளமை:மூன்றாம் பாலினத்தவரின் அரசுப்பணிக்கு...


மதுரையைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான எஸ்.ஸ்வப்னா அவர்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி, மாநில பதிவுத் துறையின் உதவியாளராக அண்மையில் பணியில் சேர்ந்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC:Tamil Nadu Public Service Commission) நடத்திய பிரிவு 2ல் தேர்வு எழுதி, வெற்றி பெற்று, அரசிதழ் பதிவுறா அலுவலராக (non-gazetted officer) பணியில் சேர்ந்திருப்பது இதுவே முதல் முறை என செய்திகள் கூறுகின்றன (19,மார்ச்,2018). இதுமட்டுமல்ல, மாநில அரசின் மூன்று உத்தரவுகளுக்கு எதிராக ஸ்வப்னா அவர்கள் மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக மூன்றாம் பாலினத்தவர்க்கு பல்வேறு பலன்களும் கிடைத்துள்ளன. இது குறித்து செய்தியாளரிடம் இவ்வாறு சொல்லியுள்ளார், 27 வயதாகும் ஸ்வப்னா. என்னை மூன்றாம் பாலினத்தவர் என்று கூறுவதை ஏற்க முடியாது. நான் பெண்ணாக மதிக்கப்பட வேண்டும். எனது அனைத்துப் போராட்டங்களுக்கும் பெற்றோர்தான் மிகப்பெரிய காரணம். எந்த நிபந்தனையும் இல்லாமல் தூய்மையான அன்போடு என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். எனது கல்விதான் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்தால், 2013ம் ஆண்டு TNPSC தேர்வு எழுத முடியாமல் போனபோது எனது சட்டப் போராட்டம் தொடங்கியது. சென்னையில் போராட்டம் நடத்திய நான், மதுரை கிளையில் இதற்காக வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கில் தன்னலம் கருதாத இரண்டு வழக்குரைஞர்கள் கட்டணம் இல்லாமல் வழக்கில் வாதாடி உதவி செய்தனர். பெண்கள் என்ற பிரிவின்கீழ் மூன்றாம் பாலினத்தவரைத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் எனது சட்டப் போராட்டத்துக்கு பலன் கிடைத்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற TNPSC பிரிவு 4 மற்றும் பிரிவு 2ஏ தேர்வுகளிலும் வெற்றி பெற்றேன். ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே என் இலட்சியம். எனது இலட்சியத்தை அடைய நான் கடுமையாகப் போராடுவேன். TNPSCயில் செய்தது போலவே இதிலும் சாதிப்பேன்.

சகோதரி ஸ்வப்னா, வெற்றிகள் தங்களை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.