2018-05-02 14:58:00

இமயமாகும் இளமை.........: நம்பிக்கையின் விதைகள் தெரிகின்றன


இன்றைய இளையோர் தங்கள் அன்னையர் மீது எத்தனை பாசமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை, அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளைக் கொண்டு பார்க்கும்போது, பெருமையாக உள்ளது.

உத்திர பிரதேசம் ஆக்ரா மருத்துவ கல்லூரியில், உடல்நலம் குன்றிய மூதாட்டி ஒருவர், மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டுள்ளார். அவரை அனுமதிக்கும் மருத்துவப் பிரிவுக்கு எடுத்துச் செல்ல, மருத்துவ அவசர சிகிச்சை வாகனம் வரவில்லை என கூறப்படுகிறது. மருத்துவமனையிலிருந்து எந்த உதவியும் இல்லாமல் இருந்த மூதாட்டியின் மகன், அந்த வாகனம் வரும்வரை, அவரது தோளில் ஆக்ஸிஜன் சிலிண்டரைச் சுமந்தபடி தாய்க்கு ஆக்ஸிஜன் செலுத்திக்கொண்டு அருகேயே நின்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதேபோல், சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வந்த 85 வயதுடைய தாய் ஒருவர் மரணமடைந்தார். தன் இரு மகன்களில் ஒருவர் காதலித்து திருமணம் புரிந்து, குடும்பத்தை விட்டு விலகிப்போன நிலையில் மற்றொரு மகனுடன் ஏழ்மையில் வாழ்ந்து வந்த இந்த தாயின் சிதையூட்டும் செலவுக்கே பணமின்றி திணறினார் அவரின் இரண்டாவது மகன். உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்ல வசதியில்லாததால், விடியற்காலை 4 மணிக்கு தன் இரு சக்கர வாகனத்தில் வைத்து தள்ளிக்கொண்டே மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். யாரும் பார்த்தால் பிரச்சனை வரும் என எண்ணி, மகன், தாயின் உடலை எடுத்துச் செல்ல, வழியில் பார்த்தவர்களோ, இதனைத் தொலைபேசியில் படமெடுத்து, காவல்துறைக்கு அனுப்பிவிட்டனர். அங்கு வந்த காவல்துறையிடம், தன்னிடம் எந்தவித காசும் இல்லாததால் இவ்வாறு இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்ததாக கதறி அழுதுள்ளார் அந்த மகன். அவர் நிலைமையைப் புரிந்து கொண்டாலும், சட்டப்படி செயல்பட வேண்டியிருந்ததால், அந்த உடலை கைப்பற்றி,  பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் காவல்துறையினர்.

நோயுற்ற தாய்க்கும், இறந்துபோன தாய் உடலுக்கும், இந்த மகன்கள் காட்டிய பாசம், இன்றைய தலைமுறை மீது நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.