2018-05-02 15:25:00

அர்ஜென்டீனா அன்னையர் அமைப்புக்கு திருத்தந்தை செய்தி


மே,02,2018. அர்ஜென்டீனா நாட்டின் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் காணாமல்போன பிள்ளைகளைத் தேடும் அன்னையர் அமைப்பின் (Madres de Plaza de Mayo) 41வது ஆண்டு நிறைவையொட்டி, அந்த அமைப்பினருக்கு, ஒலி வடிவில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த அமைப்பை ஆரம்பித்த Esther Ballestrino de Careaga என்பவரின் மகளான Ana María Careaga என்பவருக்கு, இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1977ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதையும், இதனை ஆரம்பித்தவருடன் இணைந்து ஏனைய அன்னையரும் நீதிக்காகப் போராடி வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் பிள்ளைகளை இழந்த அன்னையர்க்காக, இந்த அமைப்பினர் நீதி கேட்டுப் போராடி வருவது பற்றியும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த அமைப்பை ஆரம்பித்த Esther Ballestrino அவர்களின் பணி தொடரப்பட வேண்டுமெனவும், அவருக்காகத் தான் செபிப்பதாகவும் கூறியுள்ளார்.

இன்றைய நாளில் அனைத்து அன்னையர்க்காகவும், நீதி மற்றும் ஒன்றிணைந்த உடன்பிறப்பு உணர்வை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆற்ற விரும்பும் நன்மனம் கொண்ட எல்லாருக்காகவும் செபிப்பதாகவும், அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் இச்செய்தி, இத்திங்கள் மாலையில் அந்த அமைப்பினரின் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.

1976க்கும், 1983ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், அர்ஜென்டீனா நாட்டில் நடைபெற்ற இராணுவ சர்வாதிகார ஆட்சியில், முப்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.