2018-05-01 15:05:00

இமயமாகும் இளமை - "மேடே" அவசர உதவியும், மே தினமும்


கடல் நடுவே, ஆபத்தில் சிக்கிய கப்பல்களிலிருந்து அவசர உதவி வேண்டி எழுப்பப்படும் குறியீட்டுச் செய்திக்கு, 'மேடே' (Mayday) என்று பெயர். "மேடே,மேடே,மேடே" என்று மும்முறை ஒலிக்கும் இச்சொல்லைத் தொடர்ந்து, எந்தக் கப்பல் எவ்விடத்தில், எவ்வகை ஆபத்தில் சிக்கியுள்ளதென்ற விவரங்கள் ஒலிவடிவத்தில் தொடரும்.

மே மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் தொழிலாளர் நாளுக்கு, 'மே டே' (May Day) அதாவது, மே தினம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு, அகில உலக தொழிலாளர் நாள், தொழில் நாள், என்று வேறு சில பெயர்களும் உண்டு.

1886ம் ஆண்டு, மே மாதம் முதல் நாள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோ மாநகரில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் துவங்கியதை இந்நாள் நினைவு கூறுகிறது. குழந்தைத் தொழிலை ஒழிக்கவும், ஒரு நாளில் 16 மணி நேரங்கள் உழைப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், தங்கள் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்கவும், நீதியான ஊதியம் வழங்கவும் கோரி, இந்தப் போராட்டங்கள் நிகழ்ந்தன. இந்த போராட்டத்தில் ஒரு சில தொழிலாளர்கள் உயிரிழக்க நேர்ந்தது.

ஒரு சில நாடுகளில், மே தினத்தையும், வசந்தக் காலத்தையும் இணைத்து விழா கொண்டாடி வருகின்றனர். தொழிலாளர் நாளையும், வசந்த காலத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, ஒரு சிலருடைய கூற்றுகள் நினைவில் எழுகின்றன.

"எல்லா மலர்களையும் நீங்கள் வெட்டிவிடலாம், ஆனால், வசந்தம் வருவதை உங்களால் தடுக்கமுடியாது" என்று சொன்னவர், பாப்லோ நெருடா (Pablo Neruda)

"இறைவன் நம்மிடம் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் நாம் அளிக்கும் விலையே நமது உழைப்பு" என்று சொன்னவர், லியோனார்தோ தா விஞ்ச்சி (Leonardo da Vinci)

'மே டே' அதாவது 'மே தினம்' என்ற தொழிலாளர் நாளையும், கடல் நடுவே ஆபத்தில் சிக்கியுள்ள கப்பல்கள் பயன்படுத்தும் 'மேடே' எச்சரிக்கை குறியீட்டையும் இளையோருடன் இணைத்துச் சிந்திக்க முயல்வோம்.

தங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல், இன்றும், அநீதமாகச் சுரண்டப்படும் இளையோர், விழித்தெழுந்து, தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் துணிவும், தெளிவும் பெற, மே தினம், ஓர் அழைப்பாக இருக்கட்டும்!

நம்பிக்கை என்ற கலங்கரை விளக்கு இல்லாமல், பிரச்சனைகள் என்ற நடுக்கடலில் தத்தளிக்கும் இளையோர், 'மேடே' என்ற அவசர உதவிச் செய்திகளை குறிப்பிட்ட நேரத்தில், தகுந்த இடங்களுக்கு அனுப்பி, உதவிகள் பெறுவார்களாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.