2018-04-30 15:50:00

கொரிய அமைதி முயற்சிகளில் செபத்துடன் இணையும் திருத்தந்தை


ஏப்.30,2018. இரு கொரிய நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் நேர்மறை விளைவுகள் குறித்து, தான் மகிழ்வதாகவும், தன் செபங்களுடன் அப்பாதையில் உடன் செல்வதாகவும் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த வெள்ளியன்று இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து, துணிச்சலான ஓர் அர்ப்பணத்தை கையிலெடுத்துள்ளது குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணு ஆயுதங்களற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்க இது உதவும் என்றார்.

உண்மையான பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கும் இந்தப் பாதையில், அமைதியின் வருங்காலமும் உடன்பிறந்த நட்புணர்வும் தோல்வியடையாது எனவும், இரு நாடுகளுக்கிடையே உருவாகும் ஒத்துழைப்பு, கொரிய மக்களுக்கும், உலகமனைத்திற்கும் நற்கனிகளைக் கொணர்வதற்கு, தான் நம்பிக்கையுடன் தொடர்ந்து செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், தொழிலாளர் தினமான இச்செவ்வாய்க்கிழமையன்று மாலை, உரோம் நகருக்கருகேயுள்ள தெய்வீக அன்பின் அன்னை திருத்தலம் சென்று, மரியன்னையின் மாதம் என்றழைக்கப்படும் மே மாதத்தைத் துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.