2018-04-26 15:48:00

மத்தியக் கிழக்கின் அமைதிக்காக, பாரியில் திருத்தந்தை செபம்


ஏப்.26,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை மாதம் 7ம் தேதி, இத்தாலியின் பாரி (Bari) எனுமிடத்தில், அனைத்து கிறிஸ்தவ சபைகளோடும் சேர்ந்து, மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி வேண்டி, வேண்டுதல்களை மேற்கொள்வார் என்று திருப்பீட செய்தித்தொடர்புத்துறை தலைவர், Greg Burke அவர்கள் இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

புனித நிக்கோலஸ் அவர்களின் புனித நினைவுப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ள பாரிக்கு, ஜூலை 7ம் தேதி செல்லும் திருத்தந்தை, மத்தியக் கிழக்குப் பகுதியின் நிலவரங்கள் குறித்த ஆலோசனைகளையும், செபங்களையும், ஏனைய கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன் மேற்கொள்வார் என்ற அறிக்கையை, தொடர்புத் துறை .வெளியிட்டது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள சிரியா, ஏமன், லெபனான், ஈரான், புனித பூமி ஆகிய நாடுகளில் நிலவும் நிலைகள், இந்த வேண்டுதல் நாளின் மையங்களாக அமையும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாரி, 'கீழை வழிபாட்டு முறை சகோதரர்களைச் சந்திக்கும் ஒரு சன்னல்' என்றும், அங்கு வணங்கப்பட்டுவரும் புனித நிக்கோலஸ், கீழை வழிபாட்டு முறை சகோதரர்களால், குறிப்பாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சகோதரர்களால் பெரிதும் போற்றப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

திருத்தந்தையின் இந்த முயற்சியைக் குறித்து, சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு தன் நன்றியையும், பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.