2018-04-26 15:20:00

இமயமாகும் இளமை – குடிப்பழக்கத்தின் தீமையை உணர்த்தும்...


அந்த ஊரின் டாஸ்மாக் கடை வாசலில் நின்றுகொண்டு, அண்ணா குடிக்காதிங்க.. அண்ணா குடிக்காதிங்க.. என்று, வயது வித்தியாசம் பார்க்காமல், அங்கு குடிக்க வருவோரின் கால்களிலும், கடையில் குடித்து தள்ளாடிச் செல்வோரின் கால்களிலும் விழுந்து புலம்பிக் கொண்டிருக்கின்றான் மனநிலை பாதிக்கப்பட்ட ஓர் இளைஞன். அந்த இளைஞனின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருந்தவர். நல்ல வருமானம். அந்த இளைஞன், வீட்டில் ஒரே பிள்ளை என்பதால், கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து, கேட்டபோதெலாம் பணம் கொடுத்து, ராஜா போலத்தான் வளர்த்தார்கள். கல்லூரி காலத்தில், அவனின் பணத்தில், அவனோடு சேர்ந்து அவனின் இரு நண்பர்களும், டாஸ்மாக் கடை செல்வது, சிகரெட் பிடிப்பது என காலத்தைச் செலவிட்டனர். இவர்களின் இந்நடவடிக்கையை, கல்லூரி நிர்வாகமும், பெற்றோரும் கண்டிக்க ஆரம்பித்தனர். படிப்பு முடிந்து அவனின் நண்பர்கள் தங்களுக்கென ஒரு வாழ்வை அமைத்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டனர். ஆனால், அவனோ தொடர்ந்து மதுவின் துணையிலேயே இருந்தான். ஒருநாள் அவனின் அப்பா வேலை முடிந்து வீடு திரும்பியவேளையில் விபத்திற்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவனின் அப்பாவின் உயிரைக் காப்பாற்ற, உடனடியாக பத்து இலட்சம் ரூபாயும், AB+ இரத்த வகையும் தேவைப்பட்டன. அவனின் அம்மா பணத்தை உடனடியாக செலுத்தினாலும், அந்த இரத்த வகை யாரிடமும் கிடைக்கவில்லை. அவனின் இரத்தம் மட்டுமே அவனின் அப்பாவுக்குப் பொருந்துவதாக இருந்தது. நண்பர்களோடு ஊர் சுற்றப் போயிருந்த அந்த இளைஞன், செய்தி கேள்விப்பட்டு அன்று இரவு மருத்துவமனைக்கு ஓடோடி வந்தான். அவனின் இரத்தத்தைச் சோதித்த மருத்துவர்கள், அன்று மதியம் அவன் மது குடித்திருந்ததால் அவனின் இரத்தம் பயன்படாது, அவன் பயனற்றவன் என்று சொல்லிவிட்டார்கள். இதற்கிடையில், சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காததால், பணம் இருந்தும், அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அவனின் அப்பா இறந்துவிட்டார். உயிர் கொடுத்த அப்பாவுக்கு இரத்தம் கொடுத்து காப்பாற்ற முடியாத நீயெல்லாம் ஒரு மகனா என, அவன் முன்னாலேயே எல்லாரும் திட்டிவிட்டுச் சென்றார்கள். அப்பாவுக்கு இரத்தம் கொடுத்து காப்பாற்ற முடியாமல், அவரைக் கொலைசெய்து விட்டாயே பாவி என, அவன் அம்மா கதறித் துடித்து அழுதார்கள். அதன்பின்னர் அந்த இளைஞன், தனது குடிப்பழக்கத்தால் அப்பா உயிரைக்கூட காப்பாற்ற முடியவில்லையே என நினைத்து நினைத்து, மனநோயாளி ஆகிவிட்டான். மனநோயாளியான தன் மகனைக் குணப்படுத்த சேமித்த பணத்தையெல்லாம் செலவழித்த அவனின் அம்மா, இப்போது வீட்டுவேலை செய்து கண்ணீருடன் வாழ்க்கையை நடத்துகின்றார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.