2018-04-26 16:08:00

அமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது


ஏப்.26,2018. அமைதியும் பாதுகாப்பும் இன்றி, நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை அடையமுடியாது என்றும், இந்த இலக்குகளை உறுதியாக அடையமுடியாதபோது, அமைதியும், பாதுகாப்பும் சிதைக்கப்படுகின்றன என்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நிரந்தரப் பார்வையாளர் என்ற நிலை வகிக்கும் திருப்பீடத்தின் பிரதிநிதியாக, தலைமையகக் கூட்டங்களில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், "அமைதி நோக்கி ஐ.நா.வின் முழுமையான முயற்சி" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இப்புதனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

உலகின் அனைத்து நாடுகளும், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய முன்னேற்றத்தை, 2030ம் ஆண்டிற்குள் அடையவேண்டுமெனில், மனித சமுதாயத்தை கிழித்துவரும் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

உலக அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதையும், போர்கள் நிலவும் நாடுகளில், குழந்தைகளும், சிறாரும் பாதுகாக்கப்பட வேண்டியதையும் திருப்பீடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது, இனியும் வலியுறுத்தி வரும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இனம், மதம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் என்ற அனைத்து தளங்களிலும் சமத்துவம் உறுதி செய்யப்படுவது ஒன்றே, நிலையான அமைதியையும், பாதுகாப்பையும் கொணரும் என்றும், இந்த வழியே, முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் என்றும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.