2018-04-26 16:17:00

ஆசியா பீபீ விடுதலைக்கென ஏப்ரல் 27 செபமும், உண்ணாநோன்பும்


ஏப்.26,2018. பாகிஸ்தானில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஆசியா பீபீயின் விடுதலைக்கென, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து, ஏப்ரல் 27, இவ்வெள்ளியன்று செபமும், உண்ணாநோன்பும் மேற்கொள்கின்றனர் என்று, இலாகூர் பேராயர் செபாஸ்டின் ஷா அவர்கள், பீதேஸ் (Fides) செய்தியிடம் கூறினார்.

தேவநிந்தனை செய்தார் என்று பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 2009ம் ஆண்டுமுதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசியா பீபீ அவர்களின் விடுதலைக்காக, பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சியில், நல்மனம் கொண்ட அனைவரும் இணையவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதி, சாகிப் நிசார் அவர்கள், ஆசியா பீபீ அவர்களின் வழக்கில் தான் நேரடியாக ஈடுபடவிருப்பதாக அண்மையில் அறிவித்திருப்பது, அக்குடும்பத்திற்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

2015ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரை வழங்கியபின், ஆசியா பீபீ அவர்களின் கணவரையும், மகளையும் சந்தித்தபோது, ஆசியா பீபீ அவர்களுக்காக தான் செபிப்பதாக கூறினார்.

மேலும், இவ்வாண்டு, பிப்ரவரி 24ம் தேதி, மீண்டும் ஒருமுறை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆசியா பீபீ அவர்களின் கணவரையும், மகளையும் தனியே சந்தித்து, தன் செபங்களில் அக்குடும்பத்தை நினைவுகூருவதாகக் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.