2018-04-25 16:00:00

கொரியத் தலைவர்கள் சந்திப்பிற்கு திருத்தந்தையின் செபங்கள்


ஏப்.25,2018. அமைதியை மிக ஆர்வமாக நாடும் கொரிய மக்களுக்கு என் தனிப்பட்ட செபங்களையும், திருஅவை அனைத்தின் அருகாமையையும் நான் உறுதி கூறுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

ஏப்ரல் 27, வருகிற வெள்ளியன்று, தென் கொரியா மற்றும் வட கொரியாவின் அரசுத் தலைவர்கள், மூன் ஜே-இன் அவர்களும், கிம் ஜாங் உன் அவர்களும் ஓர் உயர்நிலை சந்திப்பில் ஈடுபடவுள்ளனர் என்பதை, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இச்சந்திப்பு, கொரிய தீபகற்பத்திற்கும், உலகிற்கும் அமைதியை உறுதி செய்யும் ஒரு முயற்சியாக அமைவதற்கு அனைவரும் செபிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

இவ்விரு தலைவர்களும் மேற்கொள்ளும் சந்திப்பில், மனம் திறந்த உரையாடல் நடைபெறவேண்டுமென்றும், ஒப்புரவுப் பாதையில் செல்வதற்கு உறுதியான முடிவுகள் எடுக்கப்படவேண்டுமென்றும் தான் விரும்புவதாக திருத்தந்தை கூறினார்.

நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, மக்களிடையே நட்புறவை வளர்க்கும் முயற்சிகள், உலகின் எப்பகுதியில் நிகழ்ந்தாலும், அவற்றை முழுமனதுடன் ஊக்குவிக்க திருப்பீடம் விரும்புகிறது என்று, இந்த விண்ணப்ப உரையில் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

மக்களின் மீது நேரடியான அரசியல் அதிகாரம் கொண்டுள்ள அனைத்துத் தலைவர்களும், அமைதியைக் கட்டியெழுப்பும் கலைஞர்களாகத் திகழ்வதே தன் விருப்பமும், வேண்டுகோளும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் விண்ணப்ப உரையை நிறைவு செய்தார்.

கொரிய நாடுகளுக்கிடையே இறுதி முறையாக, 2007ம் ஆண்டு சந்திப்பு நடைபெற்றது என்பதும், அச்சந்திப்பில், அப்போதைய தென் கொரியத் தலைவர், ரோ மூ-ஹியூன் அவர்களும், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் இல் அவர்களும் சந்தித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.