2018-04-25 16:20:00

"ஆல்பி ஈவான்ஸுக்காக மீண்டும் விண்ணப்பிக்கிறேன்"-திருத்தந்தை


ஏப்.25,2018. "சிறு குழந்தை ஆல்ஃபி ஈவான்ஸுக்காக எழுப்பப்படும் செபங்கள், மற்றும் ஆதரவு குரல்கள் அனைத்தினாலும் மனம் கலங்கி, நான் மீண்டும் என் விண்ணப்பத்தை புதுப்பிக்கிறேன். அவனது பெற்றோரின் துயரத்திற்கு செவிமடுக்கவும், புதிய மருத்துவ முறைகளைத் தேடிச்செல்ல அவர்கள் கொண்டுள்ள விருப்பத்திற்கு இடம் தரவும் வேண்டுமென விண்ணப்பிக்கிறேன்" என்ற சிறப்பு டுவிட்டர் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 23, இத்திங்கள் இரவு வெளியிட்டார்.

குழந்தை ஆல்ஃபி ஈவான்ஸுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு இத்தாலியின் இரு மருத்துவமனைகள் முன்வந்துள்ள நிலையில், இத்தாலிய அரசு இக்குழந்தைக்கு குடியுரிமையும் வழங்கியுள்ளதையடுத்து, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தி வழியே மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் செய்துள்ளார்.

இதற்கிடையே, லிவர்பூல், ஆல்டர் ஹே மருத்துவமனை, ஆல்ஃபி ஈவான்ஸுக்கு வழங்கிவந்த செயற்கை மூச்சு இயந்திரத்தை, ஏப்ரல் 23ம் தேதி நிறுத்திவிட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன.

செயற்கை மூச்சு நிறுத்தப்பட்ட ஒரு சில நிமிடங்களில் குழந்தை ஆல்ஃபி இறந்துவிடுவான் என்று மருத்துவமனை கூறியிருந்தும், அக்குழந்தை தொடர்ந்து சுவாசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

அக்குழந்தையை இத்தாலிக்குக் கொணரும் முயற்சியில் மருத்துவ மனைகளும், ஒரு வான்வெளி ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரும் தயார் நிலையில் உள்ளன என்றாலும், பிரித்தானிய நீதி மன்றம் இந்த உத்தரவை இதுவரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.