2018-04-24 16:16:00

ஆயுதக் கிடங்குகள் அணு ஆயுதங்களற்ற இடங்களாக அமைய திருப்பீடம்


ஏப்.24,2018. ஆயுதக் கிடங்குகள், அணு ஆயுதங்களற்ற இடங்களாக அமைக்கப்படுமாறு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது, திருப்பீடம்.

அணு ஆயுதப் பரவலைத் தடைசெய்யும் ஒப்பந்தம் குறித்து பரிசீலனை செய்வதற்கு, 2020ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்குத் தயாரிப்பாக, இத்திங்களன்று இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் இவான் யுர்கோவிச் அவர்கள், அணு ஆயுதங்கள் குறித்த திருப்பீடத்தின் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதைத் தடை செய்வதும், அந்த ஆயுதங்களை ஒழிப்பதும், மனிதக் குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொருவரின், ஒழுக்க மற்றும் சட்ட முறையான கடமை எனவும் வலியுறுத்திப் பேசினார், பேராயர் யுர்க்கோவிச்.

அணு ஆயுதங்கள், உலகில் தொடர்ந்து இருப்பதும், அவை அதிகரிக்கப்படுவதும், மனிதக் குடும்பத்தில் அச்சம், வன்முறை மற்றும் ஆதிக்க மனநிலையை ஊக்குவிக்கின்றன எனவும் உரைத்த பேராயர் யுர்கோவிச் அவர்கள், இந்த ஆயுதப் பரவல்களைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளையும் ஊக்கமிழக்கச் செய்கின்றன எனவும் தெரிவித்தார்.

அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்கும் இலக்கு நிறைவேற வேண்டுமெனில், மனித இதயங்களிலிருந்து அச்சத்தையும் காழ்ப்புணர்வுகளையும் அகற்ற வேண்டுமென்றும், இராணுவக் கிடங்குகளில் அணு ஆயுதங்களுக்கு இடமின்றி செய்ய வேண்டுமென்றும் கூறினார் பேராயர் யுர்க்கோவிச்.

பேராயர் இவான் யுர்கோவிச் அவர்கள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.