2018-04-24 16:24:00

மரண தண்டனை சிறார் பாலியல் வன்செயல் பிரச்சனையை நிறுத்தாது


ஏப்.24,2018. இந்தியாவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் திருஅவைத் தலைவர்கள்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று, இந்தியா எங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதல் பெற்று, மத்திய அரசு, அக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டம் குறித்து கருத்து தெரிவித்த போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், முதலில் இத்தகைய குற்றவாளிகளின் மனப்போக்கை மாற்றுவதற்கு சமுதாயம் முன்வரவேண்டும் என்று கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றும் சமூக ஆர்வலரான அருள்சகோதரி லிசி தாமஸ் அவர்கள் கூறுகையில், மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, நாடெங்கும் காணப்படும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆறுதல் அளிப்பதாய் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ அல்லது நீண்ட கால சிறைத்தண்டனையோ அளிப்பது, பாலியல் வன்செயலை ஒழித்து விடுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார், அருள்சகோதரி லிசி. 

இதற்கிடையே, இச்சட்டம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள தில்லி உயர்நீதிமன்றம், பாலியல் குற்றங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதையும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க அவர்களுக்குக் கல்வி கற்பிப்பது பற்றியும் மத்திய அரசு சிந்திக்கவில்லை,  பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதைப் பொருத்தவரை மத்திய அரசு அறிவியல் ரீதியாக ஏதாவது ஆய்வு நடத்தியதா? இதனால் பாதிக்கப்படும் சிறுமிக்கு ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்து பார்த்ததா? போன்ற கேள்விகளை கேட்டுள்ளது.

ஆதாரம் :  UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.