2018-04-23 15:04:00

வாரம் ஓர் அலசல் – உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க...


ஏப்.23,2018. ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க விரும்பி, ஊரில் சிலரிடம் ஆலோசனை கேட்டார். பணம் இருந்தால் போதுமென்றார்கள் சிலர். எனவே அவர் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். குறுகிய காலத்தில் நிறையச் செல்வம் சேர்த்து, பெரிய ஆளானார். ஆனால் அவர் தேடிய மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் சிலரிடம் ஆலோசனை கேட்டார் அவர். செல்வத்தைச் சேர்த்தால் மட்டும் இன்பம் வந்துவிடாது,  அதைச் செலவு செய்து இன்பம் காண வேண்டும் என்றனர். ஆதலால் முதலில் அந்த மனிதர் பணத்தை எடுத்துக்கொண்டு விருப்பமான நாடுகளுக்குச் சென்றார். பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார். விரும்பியதை வாங்கிச் சாப்பிட்டார். மது, போதைப் பழக்கத்தில் இறங்கினார். இவை எதுவுமே அவர் தேடலுக்குப் பதில் சொல்லவில்லை. பிறகு, வேறு சிலர் திருமணம் செய்து கொள் என்றனர். கடைசியாக திருமணமும் செய்து குடும்பம் நடத்தினார். அந்த வாழ்க்கையிலும் திருப்தி அடையாமல், இன்னும் சிலர் சொன்னதை நம்பி, துறவறத்தில் ஆவல் கொண்டார் அவர். வீட்டிலிருந்த தங்க வைர நகைகள், பணம்.. இவை எல்லாவற்றையும் மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு ஒரு யோகியைத் தேடிச் சென்றார். யோகியின் காலடிகளில் தான் கொண்டு சென்ற மூட்டையை வைத்தார். சுவாமி, எனக்கு இதெல்லாம் இனித் தேவையில்லை, மகிழ்ச்சி மட்டுமே தேவை என்றார். அந்த ஆளை நிமிர்ந்து பார்த்த யோகி, அவசர அவசரமாக அந்த மூட்டையைத் தூக்கிக்கொண்டு வேக வேகமாக ஓடினார். அய்யோ ஏமாந்துபோய்விட்டோமே என கலங்கி, அந்த மனிதரும் யோகி பின்னாலேயே ஓடினார். ஓரிடத்தில் இருவரும் மூச்சிரைக்க நின்றனர். அப்போது யோகி சொன்னார், என்ன பயந்துட்டியா, இந்தா உன்னோட செல்வம். நீயே வச்சுக்க என, மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார். தனது செல்வம் திரும்பக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தார் அந்த மனிதர். அப்போது யோகி சொன்னார், நீ இங்கே வர்றதுக்கு முன்னாடிகூட இந்தத் தங்கமும் வைரமும் பணமும் உன்கிட்டேதான் இருந்தன. அப்போ உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்ப உன்கிட்டே இருக்கிறது அதே தங்கமும் வைரமும் பணமும்தான். ஆனா இப்ப உன் மனசுலே மகிழ்ச்சி இருக்கு... இதிலேருந்து என்ன தெரியுது...

மகிழ்ச்சியை பணத்தால் பெற முடியாது என்பதையும், உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதையும், அந்த யோகி, அந்த மனிதருக்கு சிறு செயல் வழியாக அழகாக விளக்கிவிட்டார். பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்று சொல்லி, கடந்த வாரத்தில், இந்தியாவில், 24 வயது கோடீஸ்வர இளைஞர் ஒருவர் சமணத் துறவியாக வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் (Kolhapur) சேர்ந்தவர் மோக்சேஷ் ஷா (Mokshesh Shah). தணிக்கையாளர் படிப்பு (Chartered Accountant) படித்த பின்னர், நகரில் பிரபலமான தணிக்கையாளராக மாறினார் மோக்சேஷ். இவரது பெற்றோர் தொழிலதிபர்கள். ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் விற்று ஊதியம் ஈட்டும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். JK Corporation என்ற பெயரில், பேக்கிங் செய்ய உதவும் காகிதங்கள், தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் அவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர். அதோடு, வைர வியாபாரத்தையும் அவர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மோக்சேஷ் ஷா, திடீரென சமண மதத்தின் மீது மிகுந்து ஆர்வம் கொண்டார். பின்னர் சமண மதத் துறவியாக மாற முடிவு செய்தார். இதையடுத்து, ஏப்ரல் 19, கடந்த வியாழனன்று, இவரை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன் பிறகு சமண மதத் துறவிகள் இவருக்கு தீட்சை அளித்தனர். ஏப்ரல் 20ம் தேதியிலிருந்து சமணத் துறவியாக வாழ்வைத் தொடங்கியுள்ளார், மோக்சேஷ். தனது துறவறம் பற்றி கூறும் மோக்சேஷ் அவர்கள், “பணத்தால் எதையும் வாங்க முடியும் என்றால், பணக்காரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது என்பது, ஒன்றைப் பெறுவது அல்ல. நம்மிடம் இருப்பதை விட்டுவிடுவதைத்தான் நிரந்தர மகிழ்ச்சி என்று சொல்கிறோம். நான் சிஏ படித்து முடித்த பிறகு, இரண்டு ஆண்டுகள் எனது தந்தையின் வணிகத்தைக் கவனித்தேன். தொடர்ந்து பொருள் சேர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. எனவே சமண மதத் துறவியாகிவிட்டேன். கடந்த ஆண்டே இதை முடிவு செய்தேன். ஆனால் என் பெற்றோர் இதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டனர். காந்திநகர்-அகமதாபாத் சாலையில் நடந்த விழாவில் அவர்கள் கலந்துகொண்டனர்”.

எப்போதும் மகிழ்ச்சியைப் பெறுவது என்பது, ஒன்றைப் பெறுவது அல்ல. மாறாக நம்மிடம் இருப்பதை விட்டுவிடுவதைத்தான் நிரந்தர மகிழ்ச்சி என்று சொல்கிறார், துறவியாக மாறியுள்ள 24 வயது கோடீஸ்வரர். மேலும், "செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை (Benjamin Disraeli)”  என்ற கூற்றின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார், மதுரையைச் சேர்ந்த போதிலட்சுமி. திருமணம், குழந்தை, குடும்பம் என்று சராசரியாக வாழ்வதற்காகவா நான் பிறந்தேன்? என்று தன்னையே கேட்டுக்கொண்ட இவர், நாட்டிற்கும், வீட்டிற்கும் பலன்தரும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று எண்ணினார். அப்போதுதான் பிளாஸ்டிக் தார் சாலை போடும் மதுரை பேராசிரியர் வாசுதேவன் பற்றி அறிந்து அவரைச் சந்தித்தார். பிளாஸ்டிக் தார் சாலைகளின் நீடித்த பலன்கள் பற்றிக் கூறி, தன்னால் தனியார் கல்லுாரிக்குள் போடப்பட்ட பிளாஸ்டிக் தார் சாலைகளையும் காட்டியிருக்கிறார் வாசுதேவன். இதைக் கேட்டபின்னர், விழிப்புணர்வு குறைவும்,ஊழலும் மலிந்துவிட்ட நமது நாட்டில், பிளாஸ்டிக் உற்பத்தியை தடுப்பதும் நிறுத்துவதும் அவ்வளவு சீக்கிரம் கைகூடிவிடாது என்பதை உணர்ந்தார் போதிலட்சுமி. பிறகு பிளாஸ்டிக் தார் சாலை போடுவதற்குத் தேவைப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கினார். தன் எண்ணத்திற்கு ஏற்ற மகளிரைக் கொண்டு, சுதேசி மகளிர் சுய உதவிக்குழுவினை கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கினார் போதிலட்சுமி. மதுரை ஆத்திகுளம் நாராயணபுரத்தில் அரசு வழங்கிய பாழடைந்த கட்டடத்தைப் புதுப்பித்தார் இவர்.  மகளிர் திட்டத்தின் வழியே பிளாஸ்டிக்கை அரைக்கும் எந்திரம் நிறுவப்பட்டது. வீடு வீடாக, தெருத்தெருவாகச் சென்று, பிளாஸ்டிக்கை தெருவில் எறியாதீர்கள், எங்களிடம் கொடுங்கள், நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று கேட்டு வாங்கினர் போதிலட்சுமி. அதுவும் போக, பழைய குப்பைகளை வாங்கி விற்கும் வியாபாரிகளை அணுகி, எங்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் தாருங்கள் என்று, பணம் கொடுத்தும் வாங்கினார். இப்படி வாங்கிய பிளாஸ்டிக் குப்பைகளைத் தரம் பிரித்து எந்திரத்திற்கு அனுப்பி பிளாஸ்டிக் சாலை போடும் மூலப்பொருளை மூட்டை மூட்டையாகத் தயாரித்தார். ஒரு கிலோ முப்பது ரூபாய், ஒரு டன் 30 ஆயிரம் ரூபாய். ஒரு டன் மூலப்பொருள் உபயோகித்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரோடு போடலாம் என்று சொல்கிறார், போதிலட்சுமி.

"மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை அன்புகூர்ந்தால், நீ வெற்றியடைவாய்" என்று சொன்னார், Albert Schweitzer. அரியலூர் மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தியாகராஜன் அவர்கள், கைம்மாறு கருதாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூகத்திற்கு  தன்னமில்லா சேவையாற்றி வருகிறார். இவரின் மகள், திருமணத்துக்குப் பிறகு, தன் கணவருடன் அமெரிக்காவில் பணியாற்றி, தற்போது அமெரிக்கவாழ் இந்தியராக உள்ளார். இந்நிலையில், வறட்சியான தனது கிராமத்தில் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணிய தியாகராஜன் அவர்கள், இதற்கு உதவியாக தன் மகள் அனுப்பிய மூன்று இலட்சம் ரூபாயைக் கொண்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளார். விளாங்குடியில் உள்ள சிறிய அளவில் பாசன வசதியுடன் கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார்குளம் மற்றும் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டையை ஆழப்படுத்தும் பணி கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, ஏரியை ஆழப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல சென்ற ஆண்டு, தன் மகள் கொடுத்த 3,70,000 ரூபாய், மேலும் கிடைத்த உதவியுடன், 5,50,000 ரூபாய் செலவில், 10 ஏக்கர் பரப்பளவுள்ள விளாங்குடி பெரிய ஏரியைத் தூர்வாரியுள்ளார், தியாகராஜன். அந்த ஏரியில் தற்போதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கூறிய தியாகராஜன் அவர்கள், ஓய்வு பெற்ற பிறகு, வீட்டில் உட்கார்ந்திருக்காமல், என் மகளின் உதவியுடன் கிராமங்களில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரையில் நீராதாரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும். அரசு செய்யவில்லை என்று குறைசொல்வதை விட்டுவிட்டு, நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும். அதற்கு எல்லோரும் முயற்சி செய்தால் போதும்". புத்தர் சொன்னார் - உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது என்று. எனவே உண்மையான மகிழ்ச்சியை அடையும் வழிகளில் வாழ்வைச் செலவிடுவோம். வாழ்க்கை அழகானது. அதில் நாம் கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு வினாடியும், ஒருபோதும் திரும்ப வரவே வராது. எனவே, வாழ்வில் பிறர்க்குப் பயன்பட வாழ்வோம். தானும் மகிழ்வாய் வாழ்ந்து, பிறரையும் அதே மகிழ்வில் வாழ வைப்போம்.                     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.