2018-04-23 15:32:00

மியான்மாரில் தமிழ் கல்வி சொல்லித்தரும் அருள்சகோதரி


ஏப்.23,2018. மியான்மாரில் வாழும் தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி விக்டோரியா அவர்கள், கோடை விடுமுறையில் தமிழ் மொழியில் பயிற்சிகள் அளித்து வருகிறார் என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

மியான்மாரின் டல்லா என்ற நகரில் அமைந்துள்ள தலைமைத் தூதர் புனித மிக்கேல் கத்தோலிக்க ஆலயத்தில், 8 முதல் 13 வயதுக்குப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு, கோடை விடுமுறையில், ஒரு மாத அளவு தமிழ் கல்வி நடைபெறுகிறது என்று இச்செய்தி மேலும் கூறுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்த முயற்சியின் வழியே, தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு வழங்கி வருவது நிறைவளிக்கிறது என்று, அருள்சகோதரி விக்டோரியா அவர்கள், UCA செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சிறுபான்மை இனங்களைச் சார்ந்தவர்கள், தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது அவசியம் என்று, மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.