2018-04-21 15:43:00

கிறிஸ்தவ சமூகங்கள் புனிதத்துவத்தை பிரதிபலிக்க அழைப்பு


ஏப்.21,2018. நம் காலத்தில் வாழும் மனிதர்கள், இறைத்தந்தையிடம் இட்டுச்செல்லும் பாதையாகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திக்க வேண்டியுள்ளது, இதனை பொறுப்புணர்வோடும், மகிழ்வோடும் ஆற்ற வேண்டியது நம் மறைப்பணியாகும் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்லாயிரக்கணக்கான இத்தாலிய கத்தோலிக்கரிடம் கூறினார்.

இத்தாலியின் பொலோஞ்ஞா மற்றும் செசேனா (Bologna, Cesena) மறைமாவட்டங்களிலிருந்து வந்திருந்த, ஏறத்தாழ 13 ஆயிரம் கத்தோலிக்கரை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இச்சனிக்கிழமை நண்பகலில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கடந்த ஆண்டில் அவ்விரு மறைமாவட்டங்களுக்கும் தான் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணங்களையும் நினைவுகூர்ந்தார்.

திருத்தந்தை 6ம்  பயஸ் அவர்கள் பிறந்ததன் 300ம் ஆண்டை முன்னிட்டு, செசேனாவிலும், மறைமாவட்ட நற்கருணை மாநாடு நிறைவை முன்னிட்டு, பொலோஞ்ஞாவிலும் மேய்ப்புப்பணி பயணங்களை மேற்கொண்டது பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்வில் திருநற்கருணையின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

ஒவ்வொரு புனிதரும், மறைப்பணியாற்ற இறைவனால் அனுப்பப்பட்டவர் எனவும், புனிதர்கள், வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில், நற்செய்தியின் ஒரு குறிப்பிட்ட செய்தியை அறிவிப்பதற்காக, இறைத்தந்தையால் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டவர்கள் எனவும் உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், தங்களின் குழுக்களில், புனிதத்துவத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதைப் பிரதிபலிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இத்திருப்பயணிகளோடும், குறிப்பாக, நோயுற்றோர் மற்றும் துன்புறவோருடன் தான் சிறப்பான முறையில் ஒன்றித்திருப்பதாகவும், தனக்காகவும் செபிக்குமாறும் கூறி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.    

திருத்தந்தையர் 6ம் பயஸ், 7ம் பயஸ் ஆகிய இருவரும் செசேனாவில் பிறந்தவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.