2018-04-21 14:39:00

உயிர்ப்புக்காலம் – நல்லாயன் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


நான்கு நாட்களுக்கு முன், (ஏப்ரல் 18, 2018) பிபிசி ஊடகத்தில் வெளியான செய்தி இது. ஐஸ்லாந்தைச் சேர்ந்த பிரைன்ஜர் கார்ல் பிர்கிஸ்ஸன் (Brynjar Karl Birgisson) என்ற 15 வயது இளையவர், 'லெகோ' (Lego) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் துண்டுகளைக் கொண்டு, 'டைட்டானிக்' (Titanic) கப்பலின் வடிவத்தை உருவாக்கியுள்ளார். 65,000த்திற்கும் அதிகமான 'லெகோ' துண்டுகளைக் கொண்டு 26 அடி நீளத்திற்கு, அவர் இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளார். இதைச் செய்து முடிக்க, அவருக்கு, மொத்தத்தில், 700 மணி நேரங்களுக்கு மேல் ஆயிற்று என்று கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, அவர், சிறுக, சிறுக உருவாக்கிய இந்தக் கப்பல் வடிவம், தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்தக் கப்பலை உருவாக்கிய இளையவர் பிரைன்ஜர் அவர்கள், 'ஆட்டிசம்' எனப்படும் மாற்றுத்திறன் கொண்டவர். "என்னைச் சூழ்ந்திருக்கும் 'ஆட்டிசம்' என்ற மூடுபனியை விட்டு நான் வெளியேறுவதற்கு, 'டைட்டானிக்' கப்பல் கட்டும் முயற்சி எனக்குப் பெரும் உதவியாக இருந்தது" என்று அவர் கூறியுள்ளார். 'டைட்டானிக்' கப்பல், கடலில் மூழ்கி, 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இருந்தாலும், அக்கப்பல் இன்னும் பலரது கற்பனைக் கடலில் மிதந்து வருகிறது. அக்கப்பலைப் பற்றிய விவரங்களும், கதைகளும் இன்னும் நம்மை ஈர்த்து வருகின்றன.

"எதுவும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது" என்ற ஆணவ அறிக்கையுடன், 1912ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ம் தேதி புறப்பட்ட 'டைட்டானிக்' கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லான்டிக் கடலில், ஒரு பனிப்பாறை மீது மோதி, இரு துண்டுகளாகப் பிளந்து, கடலில் மூழ்கியது. அக்கப்பலின் வீழ்ச்சி, மனித ஆணவத்திற்கு விழுந்த மரண அடி. ஆனால், 'டைட்டானிக்' மூழ்கிய நேரத்தில் நிகழ்ந்த வீரச் செயல்கள், மனிதத் தியாகத்தை உயர்த்திப் பிடிக்கும் தீபங்களாக ஒளி வீசுகின்றன. அந்த தியாகத் தீபங்களில் மூன்று, Thomas Byles, Benedikt Peruschitz, Juozas Montvila, என்ற மூன்று அருள் பணியாளர்களைப் பற்றியவை.

எந்த சக்தியாலும் இந்தக் கப்பலை அழிக்கமுடியாது என்ற அகந்தையுடன் 'டைட்டானிக்' பயணித்ததால், 2200க்கும் மேற்பட்ட பயணிகளையும், பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல், 700 பேர் தப்பிக்கத் தேவையான உயிர் காக்கும் படகுகளை மட்டும் சுமந்து சென்றது. எனவே, அது மூழ்கும் நிலையில் இருந்தபோது, 700 பேருக்கு மட்டுமே தப்பித்துச் செல்லும் உதவிகள் வழங்கப்பட்டன. ஏனைய 1500க்கும் மேற்பட்டோர், பனிப்பாறைகள் நிறைந்த கடலில் மூழ்கி, இறக்கும் வண்ணம் கைவிடப்பட்டனர்.

உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல, இம்மூன்று அருள் பணியாளர்களுக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அவற்றை மறுத்துவிட்டு, மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி, அம்மூவரும் கடலில் மூழ்கி இறந்தனர். இந்த விபத்தைக் குறித்து எழுதப்பட்ட வரலாற்றில், இவர்களது பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை; இவர்களது உடல்களும் மீட்கப்படவில்லை. ஆனால், இவர்களது இறுதிநேர ஆன்மீகப் பணிகளைக் கண்ட பலரும், அவர்கள் தலைமுறையினரும் இவர்களை, பெருமையுடன், நன்றியுடன், இன்றும் எண்ணி வருகின்றனர். இன்று நாம் கொண்டாடும் நல்லாயன் ஞாயிறன்று, இந்த மூன்று அருள்பணியாளர்களைப்பற்றி சிந்திப்பது பயனளிக்கும்.

ஆங்கிலிக்கன் சபையில் பிறந்த Thomas Byles அவர்கள், தன் 24வது வயதில் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்து, 32வது வயதில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தன்னைத்தொடர்ந்து, கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்த தன் தம்பியின் திருமணத் திருப்பலியை நிகழ்த்த, அருள்பணி Byles அவர்கள், நியூ யார்க் நகர் நோக்கி பயணம் செய்தார். அருள்பணி Peruschitz அவர்கள், புனித பெனடிக்ட் துறவுச் சபையைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் Minnesota  மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்க, கப்பலில் சென்று கொண்டிருந்தார்.

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முந்தின நாள், ஏப்ரல் 14, ஞாயிறன்று, அருள்பணி Byles அவர்களும், அருள்பணி Peruschitz அவர்களும், கப்பலில் பயணித்த கத்தோலிக்கர்களுக்கு, ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினர்.

இம்மூன்று அருள் பணியாளர்களில் இளையவரான அருள்பணி Juozas Montvila அவர்களின் வயது 27. லித்துவேனியா நாட்டில் பிறந்த இவர், தன் 23வது வயதில் கீழைவழிபாட்டுமுறை திருஅவையில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இரஷ்ய அரசின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டிருந்த கத்தோலிக்கர்களுக்கு, இரகசியமாக அருள்பணி புரிந்துவந்த இவர், அமேரிக்கா சென்று, இன்னும் சற்று சுதந்திரமாக தன் அருள்பணிகளைத் தொடரும் நோக்கத்துடன் கப்பலில் புறப்பட்டார்.

இம்மூவரின் வாழ்விலும் நல்லாயன் இயேசுவின் பண்புகள் வெளிப்பட்டதை உணர்கிறோம். அச்சுறுத்தும் ஓநாயாக அரசின் அடக்குமுறைகள் சூழ்ந்தாலும், தன் ஆடுகளுக்குத் தேவையான ஆன்மீக உதவிகள் செய்த அருள்பணி Montvila அவர்கள், வேற்றுநாட்டில் சுதந்திரமாகப் பணியாற்றலாம் என்ற எண்ணத்துடன் கப்பல் பயணத்தை மேற்கொண்டார். இளையோரை நல்வழிப்படுத்தும் கல்விப்பணியை மேற்கொள்ள, கடல் பயணம் மேற்கொண்டவர், அருள்பணி Peruschitz அவர்கள். இங்கிலாந்தின் Essex பகுதியில், St Helen என்ற கோவிலில், 10 ஆண்டுகளாக பங்குத்தந்தையாகப் பணியாற்றிவந்த அருள்பணி Byles அவர்கள், தன் தம்பியின் திருமணத்தை முன்னின்று நடத்த, சென்று கொண்டிருந்தார்.

இவ்விதம், தனிப்பட்டத் திட்டங்களுடன் புறப்பட்ட இம்மூவரும், ஆபத்து சூழ்ந்த நேரத்தில், தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதிலும், தங்கள் பயணத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் கருத்தாய் இருந்திருந்தால், உயிர்காக்கும் படகுகளில் ஏறியிருப்பர். ஆனால், இவர்கள் அந்த வாய்ப்பை புறந்தள்ளிவிட்டு, இறைமக்களான ஆடுகளுக்காக தங்கள் உயிரையும் வழங்கத் துணிந்தனர்.

இம்மூவரையும் புனிதர்களாக உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், இம்மூவரும் மக்களால் ஏற்கனவே புனிதர்களென போற்றப்படுகின்றனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்கள், அருள்பணி Byles அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்விப்பட்டபோது, அது ஒரு மறைசாட்சிய மரணம் என்று குறிப்பிட்டார். அருள்பணி Byles அவர்கள், பங்குத் தந்தையாகப் பணிபுரிந்து வந்த St Helen கோவிலில் இவர் நினைவாக உருவாக்கப்பட்ட ஒரு வண்ணக்கண்ணாடி சன்னலில் (Stained-glass window) பொறிக்கப்பட்டுள்ள உருவம் என்ன தெரியுமா? நல்லாயனாம் இயேசுவின் உருவம்.

1912ம் ஆண்டு, 'டைட்டானிக்' கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவை 2012ம் ஆண்டு, கடைபிடித்தபோது, இக்கப்பலை உருவாக்கியவர்களின் ஆணவம், 1500க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியது என்ற எண்ணம், நம்மை காயப்படுத்தியது. 1914ம் ஆண்டு துவங்கி, 1918ம் ஆண்டு முடிய நடைபெற்ற முதல் உலகப்போரின் நூற்றாண்டு நினைவுகள் 2014ம் ஆண்டு முதல், இவ்வாண்டு முடிய ஆங்காங்கே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு முறையும் நூற்றாண்டு நினைவுகள் கொண்டாடப்படும்போது, வரலாற்றுக் காயங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இலட்சக்கணக்கில் நிகழ்ந்த உயிர்ப்பலிகள், வரலாற்றுப் புள்ளிவிவரங்களாக, இன்று நம்மிடையே பயன்படுகின்றன. இந்த உயிர்ப்பலிகளுக்குக் காரணமாக இருந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள், இந்த மனித வேட்டையில் உயிரிழந்ததாக வரலாறு சொல்லவில்லை.

அகந்தை, தன்னலம், பேராசை, பழிவாங்கும் வெறி ஆகியத் தனிமனிதத் தீமைகளுக்குக் ‘கொள்கை’ என்ற பெயர் சூட்டி, அக்கொள்கைகளுக்காக, மக்களைப் பலி கொடுக்கும் தலைவர்கள், மனித வரலாற்றின் பக்கங்களை, அன்றும், இன்றும் நிரப்பி வருகின்றனர். இத்தகையத் தலைவர்களை, 'கூலிக்கு மேய்ப்பவர்' என்று, இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார். "நல்ல ஆயர், ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்... கூலிக்கு மேய்ப்பவர், ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார்" (யோவான் 10: 11-12).

கூலிக்கு மேய்ப்பவர் ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகும் அவலத்தையாவது ஓரளவு சகித்துக்கொள்ளலாம். ஆனால், இன்று, ஆடுகளைக் காப்பதாக மேடைகளில் முழங்கிவிட்டு, தலைவர்களாகப் பொறுப்பேற்ற பிறகு, தங்களை நம்பி பின்தொடரும் ஆடுகளை வேட்டையாடும் ஓநாய்களாக தலைவர்கள் மாறுவதை, நாம் உலகெங்கும் சந்தித்து வருகிறோம். ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பவர் நல்ல ஆயர் என்று இயேசு கூறியதற்கு நேர் எதிர் துருவமாக, ஆடுகளின் உயிர்களை பறிக்கும் ஓநாய்கள், தலைவர்களாக பொறுப்பேற்றுள்ளது, இன்று நாம் சந்திக்கும் வேதனையான உண்மை.

கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த அசிஃபா பானோ (Asifa Bano) என்ற 8 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவர், ஒரு கோவிலின் நிர்வாகியாக இருந்ததால், அக்கோவிலிலேயே இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில், நால்வர், காவல்துறையைச் சேர்ந்தவர்கள். மேலும், இவர்களில் ஒருவர், 19 வயதான இளையவர் என்பதை அறியும்போது, நம் மனம் பதைபதைக்கிறது. தங்கள் தலைவர்கள், இப்போது ஓநாய்களாக மாறி, அப்பாவி ஆடுகளை வேட்டையாடுவதையும், வேட்டையாடியபின், எவ்வித தண்டனையும் பெறாமல், வெற்றிக் களிப்புடன் சுற்றிவருவதையும் காணும் அடுத்தத் தலைமுறையினர், எவ்வித சமுதாயத்தை உருவாக்கப் போகின்றனரோ என்பதை எண்ணி, மனம் அஞ்சி நடுங்குகிறது.

சமுதாயத்தையும், தலைவர்களையும் குறை கூறிவிட்டு, அத்துடன் நம் கடமை முடிந்ததென்று ஒதுங்கிப்போவது, பழகிப்போன பொழுதுபோக்காக நமக்கு மாறிவிட்டதோ என்று கவலைப்பட வேண்டியுள்ளது. ஓநாய்களாக மாறும் தலைவர்கள் எங்கிருந்து உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்யும்போது, அங்கு, குற்றவாளிக் கூண்டில் நாம் ஒவ்வொருவரும் நிற்கவேண்டியுள்ளது. இந்த ஓநாய்கள், ஏதோ ஒரு குடும்பத்திலிருந்துதானே உருவாகியிருக்கவேண்டும்! குடும்பங்களில் ஓநாய்கள் எவ்விதம் உருவாகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள, சமூக வலைத்தளத்தில் பதிவாகியிருந்த ஒரு காணொளியை ஆய்வு செய்வோம்.

வலைத்தளங்கள் வழியே அவ்வப்போது பகிரப்படும் செய்திகள், காணொளிகள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. அவற்றில் ஒன்று இது... ஈராக் நாட்டின் குர்திஷ் (Kurdish) இனத்தைச் சேர்ந்த, 6 அல்லது 7 வயதே நிறைந்த ஒரு சிறுமி, ஒரு பாலை நிலத்தில் எதையோ குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் பயன்படுத்துவது, விளையாட்டுத் துப்பாக்கி அல்ல, Machine gun எனப்படும் உண்மையான துப்பாக்கி. இந்தக் காணொளியைப் படமாக்கியவர், அச்சிறுமியின் தந்தை என்பது ஊடகங்களின் கணிப்பு. வீடியோ காமிராவை இயக்கிக் கொண்டிருந்த அவர், சிறுமியிடம், "நீ இன்று எத்தனை ISIS தீவிரவாதிகளைக் கொன்றாய்?" என்று கேட்க, அச்சிறுமி காமிரா பக்கம் திரும்பி, தன் பிஞ்சு விரல்களை காட்டி, கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், "400 பேர்" என்று கூறுகிறாள். தொடர்ந்து அச்சிறுமியிடம், "கொல், அவர்களைக் கொல்" என்று அக்குரல் கூற, சிறுமியும் தொடர்ந்து சுடுகிறாள்.

நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் இந்த வீடியோ, இன்றைய உலகின் வன்முறைகளுக்கு ஒருவகையில் பதில் தருகிறது. பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது, குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும், உற்றாரும் என்ற உண்மை, நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனிந்து நிற்கச்செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று, நாம் ஒவ்வொருவரும், நம் குடும்பங்களில், நாம் வாழும் சூழல்களில், மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக, நல்ல மேய்ப்பர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் திருஅவை சிறப்பிக்கிறது. ஏப்ரல் 22, இஞ்ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் 16 தியாக்கோன்களை அருள்பணியாளர்களாக திருப்பொழிவு செய்கிறார். இதேவண்ணம், உலகெங்கும், ஏப்ரல், மே மாதங்களில், இளையோர் பலர் அருள்பணியாளர்களாக திருப்பொழிவு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும், நல்லாயனாம் இயேசுவைப்போல, மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பர்களாக வாழவேண்டும் என்று செபிப்போம்.

ஏப்ரல், மே மாதங்கள், முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை, இன்று, சிறப்பாக, இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளன்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.