2018-04-20 14:56:00

திருத்தந்தை : உங்கள் நிலம் புனிதரை உற்பத்தி செய்துள்ளது


ஏப்.20,2018. கடவுள் உங்கள் நிலத்திலிருந்து, நம் காலத்துக்கு ஒரு கொடையாகவும், இறைவாக்கினராகவும் ஒருவரை உயர்த்தியுள்ளார் என்று, இத்தாலியின் அலெஸ்ஸானோ நகர மக்களிடம் இவ்வெள்ளிக்கிழமை காலையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து,  இவ்வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் சம்ப்பினோ விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானத்தில் தென் இத்தாலியின் லெச்சே மாநிலத்தின் Galatina இராணுவ விமான நிலையம் சென்றார். பின்னர் அவ்விடத்திலிருந்து ஹெலிகாப்டரில் அலெஸ்ஸானோ நகர் கல்லறைக்கு அருகில் சென்றிறங்கினார் திருத்தந்தை. அங்கு அப்பகுதி ஆயர், நகர மேயர் மற்றும் மக்களால் வரவேற்கப்பட்ட திருத்தந்தை, ஆயர் தொனினோ பெல்லோ (Tonino Bello) அவர்களின் கல்லறைக்குச் சென்று செபித்தார். பின்னர் ஆயரின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை. அதன்பின்னர் அவ்விடத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களுக்கு உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் தொனினோ அவர்கள் இறந்ததன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, ஆயர் தொனினோ அவர்களுக்கு விருப்பமான, ஓ, சுதந்திரமே என்ற பாடலைப்பாடி வரவேற்ற அம்மக்களிடம், உங்கள் நிலம், ஒரு புனிதரை உற்பத்தி செய்துள்ளது என்று கூறினார்.

ஆயர் தொனினோ அவர்கள் பற்றி உரையில் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, ஆயர் தொனினோ அவர்கள்,  ஏழைகள், உண்மையான செல்வம் என்பதைப் புரிந்துகொண்டவர் என்றும், இவர், இயேசுவைப் பின்பற்றி, தன்னை ஏழைகள் பக்கம் நிறுத்தி, ஏழைகள் மீது மிகுந்த அக்கறை காட்டியவர் என்றும் கூறினார்.

உலக அளவில், அமைதியை ஊக்குவிப்பதற்கு, தல அளவில் செயல்பட்ட ஆயர் தொனினோ அவர்கள், வன்முறை மற்றும் போரின் எல்லா வடிவங்களையும் தடுப்பதற்கு, தேவையில் இருப்போரைப் பராமரிப்பதும், நீதியை ஊக்குவிப்பதுமே சிறந்த வழி என்பதில் உறுதியாய் இருந்தார் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இல்லத்தில், தெருக்களில், இலாபத்தைவிட தொழிலாளரின் மாண்பைப் பாதுகாக்க வேண்டிய பணியிடங்களில், அமைதி முதலில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் ஆயர் தொனினோ என்றும், அவரைப் பின்பற்றி நடக்குமாறும், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.