2018-04-20 15:30:00

திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் முக்கியத்துவம்


ஏப்.20,2918. கத்தோலிக்கத் திருஅவையின் சமூகக் கோட்பாடுகள், சமூக அறிவியல், அரசியல் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களின் கலந்துரையாடல்களில் இடம்பெற வேண்டும் என்று, டப்ளின் பேராயர் Diarmuid Martin அவர்கள், இவ்வாரத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“Centesimus Annus – Pro Pontifice” என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு மற்றும், அந்நிகழ்வை முன்னிட்டு, வருகிற மே மாதத்தில் உரோம் நகரில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு கூட்டம் பற்றிப் பேசிய, பேராயர் Martin அவர்கள், திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார்.

பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படைக் கோட்பாடுகள், ஏழைகளின் குரல்களைக் கேட்கச் செய்வதாய் அமைந்திருக்க வேண்டும் என்றுரைத்த பேராயர் Martin அவர்கள், முன்னேற்றத் திட்டங்களில், குடும்பங்கள் மையப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

‘டிஜிட்டல் யுகத்தில் புதிய கொள்கைகள் மற்றும் வாழ்வு முறைகள்’ என்ற தலைப்பில், பன்னாட்டு கூட்டம் ஒன்று, வருகிற மே 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை, உரோம் நகரிலுள்ள Cancelleria கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

Centesimus Annus – Pro Pontifice அமைப்பு, கத்தோலிக்கத் திருஅவையின் சமூகக் கோட்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசு-சாரா பொதுநிலையினர் அமைப்பாகும். இதனை புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1993ம் ஆண்டு ஜூன் 13ம் நாள், கத்தோலிக்க வர்த்தகர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஏனைய நிலையிலுள்ள தலைவர்களைக் கொண்டு தொடங்கினார். இந்த நிறுவனம், வத்திக்கான் நாட்டின் சட்டம் மற்றும் திருஅவையின் சட்டத்துக்கு உட்பட்டு இயங்குகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.