2018-04-18 15:27:00

சிரியா மக்களை தயவுசெய்து அமைதியில் வாழவிடுங்கள்


ஏப்.18,2018. முன்னெப்போதும் இல்லாத அளவு, சிரியா நாட்டிற்கு அமைதியும், செபங்களும் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன என்று, அந்நாட்டில் பணிபுரியும் மெல்கித்திய வழிபாட்டு முறை பேராயர் Jean Abdou Arbach அவர்கள் விண்ணப்பம் விடுத்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் அண்மையில் சிரியா நாட்டில் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, Aid to the Church in Need கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திற்கு பேட்டியளித்த பேராயர் Arbach அவர்கள், குண்டுகளின் ஓசை ஏதுமின்றி தங்கள் வாழ்வைத் தொடர விழையும் மக்களை தயவுசெய்து அமைதியில் வாழவிடுங்கள் என்று விண்ணப்பித்தார்.

முடிவே இல்லாத வண்ணம் நடைபெற்று வரும் சிரியாவின் உள்நாட்டுப் போரினால் யாருக்குப் பயன் என்பது கூட தெரியாத அளவு மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று கூறிய பேராயர் Arbach அவர்கள், உலகத் தலைவர்கள் இந்த உண்மையை எப்போது உணரப்போகின்றனர் என்ற கேள்வியை எழுப்பினார்.

சிரியாவில் நடைபெற்றுவரும் போர் கொடுமைகள் தன்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியிருப்பதாகவும், அந்நாட்டிற்கு நம் அனைவரின் ஒன்றிணைந்த செபங்கள் தேவை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 15, இஞ்ஞாயிறு தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.