2018-04-18 14:59:00

முன்னாள் திருத்தந்தையின் 91வது பிறந்தநாள் கொண்டாட்டம்


ஏப்.18,2018. ஏப்ரல் 16, இத்திங்களன்று, முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள், தன் 91வது பிறந்தநாளை, அவரது மூத்த சகோதரரும், அருள்பணியாளருமான கியோர்க் ராட்ஸிங்கர் (Georg Ratzinger) அவர்களுடன் வத்திக்கானில் கொண்டாடினார் என்று, முன்னாள் திருத்தந்தையின் தனிப்பட்ட செயலர், பேராயர் கியோர்க் கான்ஸ்வேய்ன் (Georg Ganswein) அவர்கள் கூறினார்.

இத்திங்களன்று காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியை, முன்னாள் திருத்தந்தைக்காக அவர் ஒப்புக்கொடுத்தார் என்றும், அவர், முன்னாள் திருத்தந்தைக்கு, அழகியதொரு வாழ்த்துச்செய்தியை அனுப்பியிருந்தார் என்றும், பேராயர் கான்ஸ்வேய்ன் அவர்கள் கூறினார்.

பிறந்தநாளன்று காலையில், முன்னாள் திருத்தந்தையும், இசை வல்லுனரான அவரது சகோதரரும் இணைந்து நிறைவேற்றிய திருப்பலி, இலத்தீன் மொழியில் ஆடம்பரப் பாடல் பலியாக இருந்தது என்று பேராயர் கான்ஸ்வேய்ன் அவர்கள் குறிப்பிட்டார்.

உடலளவில் சக்தி குறைந்திருந்தாலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சிந்திக்கும் திறனில் தளர்வின்றி, செயலாற்றுகிறார் என்று பேராயர் கான்ஸ்வேய்ன் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

முன்னாள் திருத்தந்தையின் 91வது பிறந்தநாளையொட்டி, இத்தாலிய ஆயர் பேரவையின் தொலைக்காட்சி நிறுவனமான TV2000, "உண்மையின் புகழுக்காக, 16ம் பெனடிக்ட்" என்ற தலைப்பில், ஓர் ஆவணப்படத்தை ஒளிபரப்பியது என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.