2018-04-17 16:08:00

அடிப்படைவாதத்தால் உருவாகும் மோதல்கள் ஆபத்தானவை


ஏப்.17,2018. இன்றைய உலகில் நம்மை அச்சுறுத்தி வருவது, கலாச்சாரங்களுக்கிடையே உருவாகும் மோதல்கள் அல்ல, மாறாக, அறியாமை, மற்றும் அடிப்படைவாதப் போக்குகளுக்கு இடையே உருவாகும் மோதல்களே என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சவுதி அரேபியா நாட்டில், ஏப்ரல் 14, கடந்த சனிக்கிழமை முதல், வரும் வெள்ளிக்கிழமை வரை பயணம் மேற்கொண்டிருக்கும் பல் சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், உலக இஸ்லாமிய அமைப்பின் பொதுச் செயலர், Muhammad Abdul Karim Al-Issa அவர்களைச் சந்தித்த வேளையில் இவ்வாறு கூறினார்.

சவுதி அரேபியாவில், கர்தினால் Tauran அவர்கள் தலைமையில் பயணம் மேற்கொண்டுவரும் திருப்பீடப் பிரதிநிதிகள் குழு, இஸ்லாமிய அரசு உயர் மட்ட அதிகாரிகளையும், அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் அடங்கிய குழுவையும் சந்தித்து உரையாடியது.

உலகிலுள்ள கிறிஸ்தவ புனிதத் தலங்கள், அனைத்து மதத்தினரையும், மத நம்பிக்கையற்றோரையும் வரவேற்க எப்போதும் திறந்தே உள்ளன என்பதை தன் சந்திப்பில் எடுத்துரைத்த கர்தினால் Tauran அவர்கள், மதங்களில் காணப்படும் தீவிரவாதப் போக்குகள் குறித்த கவலையையும் வெளியிட்டார்.

மதத்தின் பெயரால் தீவிரவாதச் செயல்களை மேற்கொள்வோர் மனம் திருந்தி வாழ நம் செபங்கள் தேவைப்படுகின்றன என்பதையும் கர்தினால் Tauran அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.