2018-04-12 15:38:00

மன்னிப்பு கோரி சிலே ஆயர்களுக்கு திருத்தந்தையின் மடல்


ஏப்.12,2018. சிலே நாட்டில் பாலியல் முறையில் தவறுகள் செய்த அருள்பணியாளர்களால் கிறிஸ்தவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டுள்ள காயங்களைக் குணமாக்க ஆயர்களின் உதவியை நாடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டு ஆயர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு சனவரி மாதம் சிலே நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், சிறார் பலர் பாலியல் முறையில் அனுபவித்த கொடுமைகளைக் குறித்தும், குறிப்பாக, இக்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய ஆயர் Juan Barros அவர்களின் தவறுகள் குறித்தும் கடுமையான விவாதங்கள் வெளிவந்தன.

இந்தக் கொடுமையின் உண்மைகளை அறிய, பேராயர் சார்ல்ஸ் ஷிக்ளூனா (Charles Scicluna) அவர்களை திருத்தந்தை அந்நாட்டிற்கு அனுப்பியதைத் தொடர்ந்து, பேராயர் ஷிக்ளூனா அவர்கள் தான் கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்து, திருத்தந்தையிடம் சமர்ப்பித்த அறிக்கையை ஆழ்ந்து ஆய்வு செய்தபின், திருத்தந்தை, அந்நாட்டு ஆயர்களுக்கு இம்மடலை அனுப்பியுள்ளார்.

இந்தக் கொடுமையின் முழு உண்மைகளை தான் சரிவரப் புரிந்துகொள்ளாமல், ஒரு சிலரைப் புண்படுத்தும் முறையில் பேசியதற்காகவும், இக்கொடுமையால் பாதிக்கப்பட்டோரிடமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடல் வழியே மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலே நாட்டில் நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமைக்கு தீர்வு காணும் வகையில், அடுத்து வரும் மாதங்களில், அந்நாட்டு ஆயர்கள், தனிப்பட்ட முறையிலும், குழுவாகவும் வத்திக்கானுக்கு வருகை தந்து, தனக்கு ஆலோசனைகள் வழங்குமாறு, ஆயர்களை அழைத்துள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.