2018-04-12 15:52:00

மகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்


ஏப்.12,2018. மகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் உலகின் அனைத்து மனிதர்களும் தேடுகின்றனர் என்பதையே, உலகெங்கும் நிகழும் குடிபெயர்தல் என்ற நிகழ்வு எடுத்துரைக்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. அவையின் மக்கள் தொகையும் முன்னேற்றமும் என்ற பணிக்குழு, ஐ.நா. தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்த 51வது அமர்வில், ஐ.நா.அவைக் கூட்டங்களில் திருப்பீட பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஏப்ரல் 11, இப்புதனன்று உரையாற்றிய வேளையில் இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு மனிதரும், அவரவர் வாழும் நாடுகளில் மதிப்போடும், பாதுகாப்போடும் வாழ்வதை உறுதி செய்வது ஒன்றே, குடிபெயர்தல் என்ற உலகளாவிய நிகழ்வுக்கு நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இத்தகையைச் சூழலை உருவாக்க அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளாதபோது, இப்பிரச்சனை பெரிதாகிறது என்றும், புலம் பெயர்ந்து செல்வோரை பகடைக்காய்களாகப் பயன்படுத்த, மனசாட்சியற்ற குழுக்கள் பல இயங்கி வருகின்றன என்றும், பேராயர் அவுசா அவர்கள் வருத்தம் தெரிவித்தார்.

உலக மயமாக்கல் என்ற போக்கு நிலையானதாக மாறிவரும் இன்றையச் சூழலில், குடிபெயர்தல் என்ற பிரச்சனையும் ஒரு நாட்டின் தனிப் பிரச்சனையாக இராமல், உலகலாவியப் பிரச்சனையாக கருதப்படவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.