2018-04-11 15:13:00

புதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணி


ஏப்.11,2018. புதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணியில், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயமும், உர்பானியா பல்கலைக் கழகமும் இணைந்து, புதிய உத்வேகத்துடன் செயலாற்றும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏப்ரல் 9, இத்திங்களன்று கொண்டாடப்பட்ட, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா, உர்பானியா பல்கலைக் கழகத்தின் முக்கியத் திருவிழாவாக அமைந்ததையொட்டி, இப்பல்கலைக் கழகத்தின் தலைவரும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கூறினார்.

கட்டுப்பாடின்றி பரவிவரும் தொழில்நுட்பங்கள், மனிதர்களை வெறும் எண்ணிக்கைகளாக மாற்றிவரும் உலக மயமாக்கல் போக்கிற்கு மாற்றாக, மனிதர்களை மாண்புறச் செய்யும் நற்செய்தி அறிவிப்புப் பணியை நாம் மேற்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று கர்தினால் பிலோனி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

இளையோரை மையப்படுத்தி இவ்வாண்டு வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தை மனதில் கொண்டு, "தன்னிலிருந்து வெளியேச் சென்று மறைப்பணியாற்றும் திருஅவைக்காக இளையோர்" என்ற மையக்கருத்துடன், இவ்விழா, உர்பானியா பல்கலைக் கழகத்தில் சிறப்பிக்கப்பட்டதென்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.