2018-04-11 15:16:00

இமயமாகும் இளமை........: முதியோர்களுக்கு கைகொடுக்கும் இளையோர்


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒன்று கூடி, அந்நாட்டில் வாழும் தமிழ் முதியோருக்கு உடல்நலப் பயிற்சிகளை, தமிழ் கலாச்சாரப்படியே வழங்கினால் என்ன என சிந்தித்தன் விளைவாகத் தோன்றியதுதான், இன்று அந்நாட்டில், குறிப்பாக, சிட்னியில் பிரபலமாக இருக்கும் ‘வைட்டாலிட்டி கிளப்’ என்ற அமைப்பு. தீபன் ரூபசிங்கம், அகிலன் ஆகிய இந்த இரு இளைஞர்களும், தங்கள் பாட்டிகள், முதிய வயதில், அவர்களுக்குத் தேவையான பராமரிப்புச் சேவைகளை, அவர்கள் மொழியில், அவர்களது கலாச்சார விழுமியங்களுடன் பெறுவதற்கு வழி இல்லை என்று உணர்ந்தபோது துவங்கியதுதான், இந்த கிளப். முதிர் வயதினருக்கு உடற்பயிற்சிகள், நல ஆலோசனைகள் போன்றவற்றை, மருத்துவ வல்லுனர்களின் உதவியுடன் வழங்கிவரும் இந்த இளைஞர்களின் சேவையை, தற்போது, மொழி பேதமின்றி, அனைத்து மக்களும் பெற்றுவருகின்றனர். தமிழ் அடையாளத்துடன், ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, ஒருவர் பொறியியலாளராகவும் இன்னொருவர் வழக்குரைஞராகவும் படிப்பை முடித்த இவர்கள், தங்கள் சமுதாயத்தின் முதியோருக்கு, குறிப்பாக, தங்கள் பாட்டிகளுக்கு உதவவேண்டிய தேவையை உணர்ந்தனர். நல்ல பணியில் இருந்த இவர்கள், தங்கள் தமிழ் சமுதாயத்திற்கு உதவும் எண்ணத்தில் இந்த வைட்டாலிட்டி கிளப்பை ஆரம்பித்தாலும், இன்று அது பிரபலமாகி, அனைவரும் பயன்படும் வகையில் பரந்து விரிந்துள்ளது. உடற்பயிற்சி மட்டுமல்ல, நலன் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர், இந்த தமிழ் இளையோர், ஆஸ்திரேலியாவில். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.