2018-04-10 15:46:00

பொறுப்புணர்வற்ற தானியங்கி ஆயுத அமைப்பு முறை தடுக்கப்பட....


ஏப்.,10,2018. உயிர் பறிக்கும் தானியங்கி ஆயுத அமைப்புமுறைகளைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, இத்திங்களன்று ஜெனீவாவின் ஐ.நா அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் இவான் யுர்கோவிச்.

உயிர் பறிக்கும் தானியங்கி ஆயுத அமைப்புமுறைகளைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் நிலையில், இந்த ஆண்டாவது நியாயமான ஒரு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்ட பேராயர் யுர்கோவிச் அவர்கள், மனிதாபிமானமற்ற வகையில் மோதல்கள் இடம்பெற்றுவரும் இன்றைய காலக்கட்டத்தில், போர் குறித்த புதிய கட்டுப்பாடுகள் சட்ட வடிவில் கொணரப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

எந்த ஓர் ஆயுதத் தலையீடும், அதன் சட்டமுறையான அங்கீகாரத்தையும், ஒழுக்கநெறிகளையும் சார்ந்து இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பேராயர்,  தானியங்கும் இயந்திரங்கள் வழியாக, போர்களை நடத்தும்போது, ஒழுக்கநெறி கேள்விகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

எந்த ஒரு தானியங்கி ஆயுதப் பயன்பாட்டிற்கும் உரிமைக் கொடுக்கும்போது, மனித உயிர்கள், சட்டம், ஒழுக்கநெறி போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், பேராயர் யுர்கோவிச்.

போர்க்காலங்களில் சூழ்நிலைகளுக்கு இயைந்தவகையில் முடிவுகள் எடுக்க வேண்டியிருப்பதாலும், பலவேளைகளில், மனச்சான்றின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியிருப்பதாலும், தானியங்கி ஆயுதங்கள் வழி போரை நடத்துவது மனித குல அழிவுக்கே வழிவகுக்கும் என்பதை வலியுறுத்திய பேராயர், தானியங்கி ஆயுத அமைப்புமுறைகள் ஆற்றும் தவறுகளுக்கு பொறுப்பேற்பது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.

அனைவரும் அமைதியில் வாழவே ஆவல் கொள்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, ஆயுதப் போட்டிகளைக் கைவிட்டு, கலந்துரையாடல், மற்றும், ஒத்துழைப்பின் கலாச்சாரத்தை ஊக்குவிக்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் பேராயர் யுர்கோவிச்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.