2018-04-10 15:36:00

சீரோ-மலங்கரா திருஅவைக்கு இரு புதிய வாரிசு ஆயர்கள்


ஏப்.10,2018. சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை திருஅவையின் இரு இந்திய மறைமாவட்டங்களுக்கு, ஆயர்கள் சாமுவேல் மார் இரேனியோஸ் காட்டுக்கல்லில், யோஹானென் மார் தெயோதோசியுஸ் கொச்சுதுண்டில் ஆகிய இருவரும், வாரிசு ஆயர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை இச்செவ்வாயன்று அங்கீகரித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தியாவின் Pathanamthitta சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆயர், சாமுவேல் மார் இரேனியோஸ் அவர்கள், திருவனந்தபுரம் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் துணை ஆயராக, இதுவரை பணியாற்றி வந்தார்.

மேலும், இந்தியாவின் Muvattupuzha சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆயர், யோஹானென் மார் தெயோதோசியுஸ் அவர்கள், சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை தலைமையகத்தில் ஆயராகப் பணியாற்றி வந்தார்.

ஆயர் சாமுவேல் மார் இரேனியோஸ் அவர்கள், கேரளாவின் Kadammanittaவில், 1952ம் ஆண்டு, மே 13ம் நாளன்று பிறந்தார். இவர், 1978ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டு, பங்குத்தந்தையாக, பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றி இருக்கின்றார்.

ஆயர் யோஹானென் மார் தெயோதோசியுஸ் அவர்கள், கேரளாவின் Puthussery Bhagonவில் 1959ம் ஆண்டு பிறந்தார். 1985ம் ஆண்டில், அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோம் கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.