2018-04-09 14:47:00

இமயமாகும் இளமை – இந்தியாவின் தங்க மகள் ‘மீராபாய்’


23 வயது இளம்பெண் சாய்கோம் மீராபாய் சானு அவர்கள், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் 21வது காமன்வெல்த் போட்டிகளில், இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர். மணிப்பூர் மாநிலம், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் (ஆக.08,1994) பிறந்த இவர், ஏப்ரல் 05, கடந்த வியாழனன்று நடைபெற்ற மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில், 196 கிலோ பளுதூக்கி தங்கப்பதக்கத்துடன், புதிய சாதனையையும் படைத்துள்ளார். 2014ம் ஆண்டில் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் பெற்ற இவர், ரியோ ஒலிம்பிக்கில் தோல்வியடைந்தார். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில், விளையாட்டை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தவேளை, அவரது குடும்பம் மற்றும் பயிற்சியாளர்களிடம் இருந்து கிடைத்த ஊக்கத்தால், அவர் புத்துயிர் பெற்றார். 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற பளுதூக்கும் உலக சாம்பியன் போட்டியில், அவரது எடையைவிட நான்கு மடங்கு அதிகமாக, அதாவது 194 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றார் மீராபாய். இவர், தனது எடையை கட்டுக்குள் வைக்க உணவுகளைத் தியாகம் செய்தார். ஆரம்பத்தில் இவருக்கு பயிற்சி செய்ய தகுந்த இரும்பு பொருட்கள் இல்லை. இதனால் இவர் மூங்கில் கட்டைகளை வைத்து பயிற்சி செய்தார். பயிற்சி மையத்திற்குச் செல்வதற்காக ஏறக்குறைய அறுபது கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார் மீராபாய். அவருக்கு அன்றாடம் பால் மற்றும் அசைவ உணவு தேவைப்பட்டபோது, அவரது பெற்றோர், அவற்றை அளிக்க முடியாத நிலையில் இருந்தனர். ஆனால் இவை எல்லாம் மீராபாய் அவர்களின் பளுதூக்கும் பயணத்தை நிறுத்தவில்லை. பதினைந்து வயதுக்குட்பட்டோருக்குரிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றபோது அவருக்கு வயது 11.  ஜுனியர் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, அவருக்கு வயது 17. பளுதூக்குதல் தவிர,  நடனத்திலும் ஆர்வமுள்ள, தங்க மகள் மீராபாய் சானு அவர்களுக்கு, வருமானம் என்பது, இன்றும் பிரச்சனையாகவே இருக்கிறது எனச் சொல்லப்படுகின்றது. கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இத்திங்கள் காலை நிலவரப்படி, இந்தியா பெற்றுள்ள பதக்க எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பதக்க வேட்டை தொடர வாழ்த்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.