2018-04-07 15:08:00

மன்னிப்பு கேளுங்கள், மன்னிப்பு அளியுங்கள், ருவாண்டா ஆயர்கள்


ஏப்.07,2018. ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதன் 24ம் ஆண்டு, ஏப்ரல் 07, இச்சனிக்கிழமையன்று நினைவுகூரப்படும்வேளை, அந்நாட்டில், 2018ம் ஆண்டு, ஒப்புரவு ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுவதை நினைவுபடுத்தியுள்ளனர், கத்தோலிக்க ஆயர்கள்.

ருவாண்டாவில், 1994ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று, அரசுத்தலைவர் Juvenel Habyarimana அவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பான்மை ஹூட்டு மற்றும், சிறுபான்மை துட்சி இனங்களுக்கு இடையே இடம்பெற்ற நூறு நாள் படுகொலைகளில், ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். 

இந்நாளை நினைவுகூர்ந்து ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒப்புரவே, உண்மை, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் எனக் கூறியுள்ளனர்.

ருவாண்டில் 2018ம் ஆண்டு, ஒப்புரவு ஆண்டாகச் சிறப்பிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், கடந்தகால வாழ்வை மதிப்பீடு செய்து, அவ்வாழ்விலிருந்து நாட்டினருக்கு கிடைத்துள்ளது என்ன என்பதைச் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

குற்றம் புரிந்தவர்கள் மன்னிப்புக் கேட்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு அளிக்கவும் வலியுறுத்தியுள்ள ருவாண்டா ஆயர்கள், கடந்தகால கசப்பான வரலாற்றிலே இருந்துவிடாமல், இரக்கம் நிறைந்தவர்களாய் வாழுமாறு கூறியுள்ளனர்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.