2018-04-05 14:42:00

இமயமாகும் இளமை – இருபது வயதில் மறுமணம் செய்த கைம்பெண்


இந்தியாவின் மங்களூரில் பிறந்த சார்ந்த கமலா தேவி சட்டோபத்யாய் அவர்கள்(Kamaladevi Chattopadhyay ஏப்.3,1903- அக்.29,1988) ஒரு சுதந்திரப் போராளி, சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, கைத்தறி வளர்ச்சிக்கும், நாடக மறுமலர்ச்சிக்கும் தூண்டுசக்தியாக இருந்தவர்... இவ்வாறு பல பெருமைகளுக்கு உரியவர் இவர். வரலாற்றில் பலமாகத் தடம் பதித்த இவரின் 115வது பிறந்த நாள், ஏப்ரல் 03, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது. இவர் தனது ஏழாவது வயதில் அப்பாவைப் பறிகொடுத்தார். அக்கால வழக்கப்படி, இவருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார், அவருடைய அம்மா கிரிஜா பாய். ஆனால், இரண்டே வருடத்தில் கணவர் காலமானார். கணவர் இறப்புக்குப் பிறகு, தன் கல்வியைத் தொடர்ந்தார் கமலாதேவி. கைம்பெண்களின் மறுமணம் கடுமையாய் எதிர்க்கப்பட்ட அந்தக் காலத்தில், தனது இருபதாவது வயதில், அரிந்திரநாத் சட்டோபாத்யாய் என்பவரை விரும்பி மறுமணம் செய்துகொண்டார். இத்திருமணப் பரிசாகக் கிடைத்த, அத்தனை வலிகளையும், கூரான விமர்சனங்களையும் துடைத்தெறிந்துவிட்டு, கணவருடன் இலண்டனுக்குச் சென்று, சமூகவியலில் சான்றிதழ் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். இந்தியா வந்ததும் கணவருடன் இணைந்து மேடை நாடகங்களை அரங்கேற்றியதுடன், விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார் இவர்.  இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த கமலா தேவி அவர்கள், காந்திஜியின் உப்புச் சத்தியாகிரகக் குழுவில், மும்பைக் கடற்கரையில், பெண்கள் பிரிவின் சார்பாக உப்பை எடுக்கச் சென்றபோது பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண்ணும் கமலாதேவிதான். சென்னை மாகாண சட்டசபைக்குப் போட்டியிட்ட இவர், இந்தியாவில் சட்ட மன்றத்துக்குப் போட்டியிட்ட முதல் பெண் என்கிற மகுடத்தைச் சூடிக்கொண்டார். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரதியில் கையெழுத்திடும் சிறப்புரிமைப் பெற்ற இந்திய தேசிய தலைவர்களில் கமலாதேவியும் ஒருவர். இவர் மட்டுமே அந்தத் தலைவர்களில் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர், பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், கைவினைப் பொருள்களின் வளர்ச்சிக்கும், பாரம்பரியக் கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கும் என, இவர் தன்னை அர்ப்பணித்தார். இதனால் இவர், `இந்தியாவின் கலாச்சார ராணி' என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். நாடகத்துறையின் வளர்ச்சிக்காகவும் இயங்கிய இவர், சங்கீத நாடக அகாடமியின் தலைமைப் பொறுப்பையும் சில காலம் அலங்கரித்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்திய அரசின் பத்ம பூஷன் விருது, (1955), பத்ம விபூஷன் (1987) விருது, ரமோன் மகசேசே விருது, சங்கீத் நாடக அகாடமி விருது, இந்திய தேசிய அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளும் கமலா தேவி அவர்களுக்குப் பெருமை சேர்த்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.