2018-04-04 15:42:00

மார்ட்டின் லூத்தர் கிங் கண்ட கனவு நம்மை உந்தித் தள்ளுகிறது


ஏப்.04,2018. மனித உரிமைகளுக்காகப் பாடுபட்ட ஓர் உயர்ந்த மனிதர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் என்றும், இவரது எடுத்துக்காட்டான வாழ்வும், எண்ணங்களும், மனித உரிமைகளுக்கு போராடும் அனைவருக்கும் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளன என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், ஏப்ரல் 4, இப்புதனன்று, மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள் கொலையுண்டதன் 50ம் ஆண்டு நினைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

2015ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையில், மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் கனவு நம்மை இன்னும் உந்தித் தள்ளுகிறது என்று குறிப்பிட்டதை, பேராயர் Jurkovič அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தங்களது சூழல்களில் புதிய கண்ணோட்டத்தை வழங்கியுள்ளனர் என்றும், இருவரும் வன்முறையற்ற கலாச்சார மாற்றத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் பேராயர் Jurkovič அவர்கள், சுட்டிக்காட்டினார்.

1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மெம்பிஸ் நகரில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சில நாட்களில், புனித பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற மூவேளை செப உரையில், இனவெறியை அழிக்க வந்த ஒரு இறைவாக்கினர் கொல்லப்பட்டுள்ளார் என்று, திருத்தந்தை அருளாளர் 6ம் பால் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.