2018-04-04 15:34:00

அமைதி கலாச்சாரத்தில் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம்?


ஏப்.04,2018. மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கொலையுண்ட 50ம் ஆண்டு நினைவைச் சிறப்பிக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களாகிய நாம், அன்பு, அமைதி, ஒருவரை ஒருவர் மதித்தல் என்ற கலாச்சாரத்தில் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம் என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

இனவெறியை அழிக்கப் போராடிய கிங் அவர்களின் நினைவு நாளில், அமெரிக்க சமுதாயம் இன்னும் இனவெறியில் ஆழ்ந்திருப்பதை எண்ணிப் பார்க்கவேண்டும் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் உயர் மட்ட பொறுப்பாளர்கள் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தான் கொல்லப்படுவதற்கு முந்திய நாள், ஏப்ரல் 3ம் தேதி, மெம்பிஸ் நகரில், கிங் அவர்கள் வழங்கிய உரையில், தான் நீண்ட காலம் வாழப்போவதில்லை என்பதையும், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தன் முதன்மை நோக்கம் என்பதையும், தெளிவாகக் கூறியதை, ஆயர்கள் குழு, தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பாப்டிஸ்ட் சபை போதகராகவும், கறுப்பினத்தவரின் சம உரிமைகளுக்குப் போராடியவருமான கிங் அவர்கள், அவரது 39வது வயதில், 1968ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி, James Earl Ray என்பவரால், சுட்டுக்கொல்லப்பட்டார்.

மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 6 முதல் 14 முடிய, புனித வார நிகழ்வுகள் நடைபெற்ற அதே வாரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல நகரங்களில் கலவரங்கள் வெடித்தன என்பதும், அந்த கலவரங்கள், புனித வார எழுச்சி என்று பெயர் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.