2018-04-03 16:09:00

பாகிஸ்தானில் அடித்தேக் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்


ஏப்.03,2018. பாகிஸ்தானில் லாகூர் மருத்துவமனைக்குச் சென்ற நிறைமாதக் கர்ப்பிணியான தன் சகோதரியை பெண் மருத்துவர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததைத் தட்டிக்கேட்ட கத்தோலிக்கர் ஒருவர், மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களால் அடித்தேக் கொல்லப்பட்டுள்ளார்.

தன் சகோதரியுடன் மருத்துவமனைக்குச் சென்ற 34 வயது சுனில் சலீம் என்பவரை, மருத்துவர்களும், பாதுகாப்புப் பணியினரும் தாக்கியதைத் தொடர்ந்து, சலீம் அவர்கள், மருத்துவ மனையிலேயே உயிரிழந்துள்ளார்.

தன் சகோதரியை மருத்துவர் ஒருவர் அறைந்ததைத் தட்டிக்கேட்ட ஒரே காரணத்திற்காக 14 மருத்துவர்களும், 20 பாதுகாப்புப் பணியாளரும் ஒன்றிணைந்து அவரை அடித்து, உதைத்துக் கொன்றுள்ளனர்.

மத சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகம் காணப்படும் பாகிஸ்தானில், மருத்துவமனை ஒன்றிலேயே ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது, மிகப்பெரும் வேதனை தருகிறது என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவை சமூகத் தொடர்பு பணிக்குழுவின் உயர் செயலர், அருள்பணி Qaiser Feroz அவர்கள் கூறினார்.

இச்சம்பவம் குறித்து தன் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்ட பஞ்சாப் முதல்வர், Shabbaz Sharif அவர்கள், காவல்துறையின் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.