2018-04-03 15:46:00

குழந்தை நரபலிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் கர்தினாலின் குரல்


ஏப்.03,2018. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றினாலேயே மீட்பைப் பெறமுடியும், ஏனைய இரத்தம் சிந்தல்கள் அனைத்திற்கும் மனித குலம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என உரைத்தார் ஐவரி கோஸ்ட் கர்தினால் Jean-Pierre Kutwa.

இவ்வாண்டின் துவக்க மூன்று மாதங்களில் மட்டும் இந்நாட்டில் மூன்று குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் Kutwa அவர்கள், இத்தகைய மூட நம்பிக்கைக் கொலைகளுக்கு நாம் இறைவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்றார்.

ஐவரி கோஸ்ட் நாட்டில், சூன்யக்கார மருத்துவர்களின் ஆலோசனைப்படி, செல்வ வளத்திற்காக, இளம் குழந்தைகளை பலி கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்நாட்டின் Yopougon எனும் நகரில், இத்தகைய நரபலிகள் நிறுத்தப்பட வேண்டும் என அன்னைமரியின் பரிந்துரையை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகள் அமைதி ஊர்வலம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டனர்.

2 கோடியே 42 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஐவரி கோஸ்ட் நாட்டில் 43 விழுக்காட்டினர் இஸ்லாமியர், 17 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், 12 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள், 4 விழுக்காட்டினர் மூதாதையர்களின் ஆவிகளை வழிபடுபவர்கள், மற்றும், 19 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்றோர்.

ஆதாரம் : CCO / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.