2018-04-02 15:30:00

கருணைக் கொலை மனப்பான்மையை எதிர்க்கும் பிரான்ஸ் ஆயர்கள்


ஏப்.02,2018. மருத்துவர்களின் துணையுடன் கருணைக் கொலையை ஆற்றுவதற்கு ஐரோப்பாவில் சட்டபூர்வமான அங்கீகாரத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில், இத்தகைய முயற்சிக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், பிரான்ஸ் நாட்டு ஆயர்கள்.

பிரான்ஸ் நாட்டின் 118 ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலைகளை ஆதரிக்கும் மனப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதேவேளை, மனித வாழ்வின் கடைசி காலத்தில் வழங்கப்படவேண்டிய அக்கறையை வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.

வாழ்வின் கடைசி காலத்தில், இயலாமையில் வாழும் மக்கள் மீது அக்கறையை செலுத்தவேண்டிய சமூகம், அவர்களின் வாழ்வை முடிப்பதற்கு துணைபோவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என உரைக்கிறது, ஆயர்களின் அறிக்கை.

ஐரோப்பாவில் நிலவிவரும், கருணைக்கொலை மனப்போக்கையும் தாண்டி, பல மருத்துவர்கள், இறுதி கட்ட நோயாளிகளுக்கு சிறப்புச் சேவையாற்றி வருவது குறித்து தங்கள் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளனர், பிரான்ஸ் ஆயர்கள்.

வாழ்வின் கடைசிகால அமைதிக்கு உறுதி வழங்கும் சட்டங்கள் மதிக்கப்படாமல், கருணைக் கொலைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான முயற்சி, சட்டத்தை மதிக்காத நிலையையும், நோயாளிகளின் உரிமைகள் மதிக்கப்படாத நிலையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

கருணையின் அடைப்படையில் கொலைக்கு சம்மதிக்கிறோம் எனக் கூறுவது, நோயாளிகள் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் போக்கல்ல எனவும் உரைத்துள்ள பிரான்ஸ் ஆயர்கள், தற்கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவித்துவரும் பிரான்ஸ் சமூகம், மருத்துவர் உதவியுடன் நடைபெறும் கருணைக் கொலைகளை ஆதரிக்க முன்வருவது, முரண்பாடாக உள்ளது என தங்கள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.