2018-04-01 12:19:00

பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை


ஏப்.01,2018. மார்ச் 31, சனிக்கிழமை இரவு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இரவு 8.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பு விழா திருவிழிப்பு திருப்பலியை தலைமையேற்று நடத்தினார். அவ்வேளையில் அவர் வழங்கிய மறையுரை:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இந்த திருவிழிப்பு கொண்டாட்டத்தை, நாம் வெளியே, இருளில், குளிரில், துவங்கினோம். ஆண்டவரின் மரணத்தால் உண்டான ஓர் அழுத்தமான மௌனத்தை நாம் உணர்ந்தோம். இத்தகைய மௌனம், சிலுவைக்கு முன், ஒவ்வொரு சீடரின் உள்ளத்தையும் அழுத்தியிருந்தது.

இயேசுவின் மரணம் உருவாக்கும் வேதனை, சீடரை பேச்சிழக்கச் செய்கிறது. அத்தருணத்தில் என்ன பேசமுடியும்? தங்கள் போதகருக்கு எதிராக சொல்லப்பட்ட பொய் சாட்சிகள், தவறான தீர்ப்பு அனைத்திற்கும் முன் சீடர்கள் ஒன்றும் சொல்லவில்லை. தங்கள் போதகருக்குப் பதிலாக தங்கள் வாழ்வை அளிக்க இயலாத நிலையை சீடர்கள் உணர்ந்தனர். இன்னும் கொடுமை என்னவெனில், அவர்கள் அவரைவிட்டு ஓடி ஒளிந்துகொண்டனர் (காண்க. யோவான் 18:25-27).

மனதை உடைக்கும், வேதனை நிறைந்த தருணத்தில், சீடர்கள் மௌனமாகிப்போன இரவு இது. இன்றைய சீடர்களும், உலகில் நிகழும் பல்வேறு அநீதமானச் சூழல்களில் ஒன்றும் செய்ய இயலாது என்று எண்ணி பேச்சிழந்து போகின்றனர்.

இந்த இரவில், "எப்போதும் இப்படித்தான் நடக்கிறது" என்று சீடர்கள் எண்ணியதால், அவர்களது நினைவுகள் திருடப்பட்டன, நம்பிக்கை வாயடைத்துப் போனது. "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" (யோவான் 11:50) என்று கயபா கூறிய சொற்களை, இதுதான் 'வழக்கமாக நடப்பது' என்று சீடர்கள் நினைத்தனர்.

நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த மௌனத்திற்கு நடுவே, கற்கள் கத்துகின்றன (காண்க. லூக்கா 19:40) அவை விலகி நின்று, “அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்” (மத்தேயு 28:6) என்று, வரலாறு கேட்டிராத மிகப் பெரிய செய்தியைக் கூறுகின்றன. கல்லறையை மூடியிருந்த கல், புதிய வழியை அனைவருக்கும் பறைசாற்றியது. மகிழ்வில் துள்ளி குதித்த அந்தக் கல், நம்மையும் அந்த மகிழ்வில், நம்பிக்கையில், இணைய அழைக்கிறது.

"ஊடுருவக் குத்தியவரை" (காண்க. யோ. 19:36) ஆழ்ந்து சிந்தித்த பெண்களுடன் நேற்று நாமும் இணைந்தது போல், இன்று அவர்களுடன் இணைந்து, காலியான கல்லறையையும், வானதூதர் கூறிய “நீங்கள் அஞ்சாதீர்கள்; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்” (மத். 28:5-6) என்ற செய்தியை ஆழ்ந்து தியானிக்கவும், நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

வானதூதரின் இச்சொற்கள், நம் வாழ்வை, குறிப்பாக, நாம் பிறருடன் கொண்டுள்ள உறவை சிந்திக்க சவால் விடுகின்றன. எந்த ஒரு சூழலிலும் இறைவன் செயலாற்ற முடியும், அவரது ஒளி, மிகவும் இருளடைந்த பகுதிகளில் ஒளியேற்ற முடியும் என்பதை காலியான கல்லறை நமக்கு உணர்த்துகிறது. மரணத்திற்குப் பின் ஒன்றுமில்லை என்று எண்ணவைக்கும் அந்த இடத்திலிருந்து அவர் உயிர்த்தெழுந்து, அங்கு நமக்காகக் காத்திருக்கிறார்.

அவர் இங்கே இல்லை... அவர் உயிர்த்துவிட்டார்! இந்தச் செய்தியே நம் நம்பிக்கையை உயர்த்திப்பிடித்து, அதை, பிறரன்புப் பணிகளாக வெளிப்படுத்துகிறது. நம் பலமற்ற நிலையை இந்த அனுபவம் அர்ச்சிக்க வேண்டும். குறுகிப்போன நம் கண்ணோட்டங்களை இச்செய்தி புதுப்பிக்கவேண்டும்.

நம் தனிப்பட்ட வரலாறுகளில் இறைவன் எப்போதும் குறுக்கிடுகிறார் என்பதை நம்புவதே, உயிர்ப்பைக் கொண்டாடுவதாகும். நம் நம்பிக்கைகளைப் புதைத்துவிடும் அச்சத்தின் மீது இயேசு வெற்றிகொண்டுள்ளார் என்பதை உணர்வதே, உயிர்ப்பைக் கொண்டாடுவதாகும்.

கல்லறையை மூடியிருந்த கல், இந்தக் கொண்டாட்டத்தை பகிர்ந்துகொண்டது; நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பெண்கள், இந்தக் கொண்டாட்டத்தைப் பகிர்ந்துகொண்டனர்; இப்போது, இந்த அழைப்பு, உங்களுக்கும் எனக்கும் விடுக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வை, நாம் எடுக்கும் முடிவுகளை, மாற்றியமைக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு. இந்த அழைப்பை ஏற்கப்போகிறோமா? அல்லது, நம் பழைய வாழ்விலேயே தங்கி, நமக்கு முன் நிகழும் அனைத்தையும் கண்டு, மௌனம் காக்கப்போகிறோமா?

அவர் இங்கே இல்லை... அவர் உயிர்த்துவிட்டார்! அவர் உங்களுக்காக கலிலேயாவில் காத்திருக்கிறார். அவர் உங்களை முதல் முறை சந்தித்து, 'அஞ்சாதே, என்னைப் பின் தொடர்வாய்' என்று கூறிய இடத்திற்கு மீண்டும் உங்களை அழைக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.