2018-03-29 12:00:00

புனித வியாழன், அருள்பணியாளருக்கு திருத்தந்தையின் மறையுரை


மார்ச்,29,2018. மார்ச் 29, புனித வியாழன் காலை 9.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை தலைமையேற்று நடத்தினார். இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளருக்கும், இன்னும் உலகில் உள்ள அனைத்து மறைமாவட்டங்களிலும் உள்ள அருள்பணியாளருக்கும் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

நாசரேத்து தொழுகைக்கூடத்தில் இயேசு மக்களுக்கு தன் முதல் செய்தியை வழங்கிய நிகழ்வை இன்றைய நற்செய்தியில் வாசித்தோம். இயேசு போதித்த வேளையில், "தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன" (லூக்கா 4:20) என்று கூறப்பட்டுள்ளது. அவ்வளவு திறமையுடன் இயேசு மக்களுக்குப் போதித்தார். இயேசு விரும்பியிருந்தால், அவர் மறைநூல் அறிஞராக, தொழுகைக்கூடங்களில் போதித்தபடி வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவரோ, மக்களுடன் நெருங்கியிருக்க விரும்பியதால், ஒரு 'தெருப்போதகராக' மாறினார். மக்களுடன் நெருங்கியிருப்பதை, வெறும் பணியாக மட்டும் நோக்காமல், அதையே தன் வாழ்வாக மாற்றினார். இத்தகைய மனநிலையை அருள்பணியாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு 'தெருப்போதகராக' எவ்வாறு வாழ்வது என்பதை, சீடரான பிலிப்பு, இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டார் (காண்க திருத்தூதர்பணிகள் 8:4.5-8). ஆண்டவரின் ஆவியார் தன்னை 'எடுத்துச் செல்வதற்கு' பிலிப்பு தன்னையே கையளித்தார் (காண்க தி.தூ.பணிகள் 8:36-40).

மக்களுடன் நெருங்கியிருப்பது, நற்செய்தியை அறிவிப்போருக்கு அவசியமான மனநிலை. இத்தகைய நெருக்கம் இரக்கத்தின் விளைவாக உருவாகிறது. நல்ல சமாரியரைப்போல செயல்பட வைக்கிறது.

அருள்பணியாளர்களின் தாயாகிய மரியாவை, 'நெருக்கத்தின் அன்னை' என்று அழைக்கலாம். கானா திருமணத்தில், அன்னை மரியா மக்களுக்கு நெருக்கமாக இருந்ததால், அங்கு உருவான குறையை உடனே உணர்ந்தார். குறையைத் தீர்ப்பதற்கு, "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று கூறினார்.

'இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்ற சொற்களைத் தியானிக்கும்போது, 'ஆன்மீக உரையாடல்', 'ஒப்புரவு அடையாளம்', 'போதித்தல்' என்ற மூன்று வழிகளில், அருள்பணியாளர்கள் மக்களுடன் நெருங்கியிருக்க முடியும் என்பதை உணரலாம்.

'ஆன்மீக உரையாடல் வழியே நெருங்கியிருத்தல்': சமாரியப் பெண்ணுடன் இயேசு உரையாடும்போது, அப்பெண், தன் தவறை உணர்வதற்கு வழி செய்கிறார். அப்பெண், பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கும் அளவுக்கு அவரைத் தூண்டுகிறார். அருள்பணியாளர்கள் மேற்கொள்ளவேண்டிய 'ஆன்மீக உரையாடலுக்கு' இந்நிகழ்வு, ஓர் எடுத்துக்காட்டு.

'ஒப்புரவு அருளடையாளம் வழியே நெருங்கியிருத்தல்': விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசு கனிவுடன் நெருங்கி வந்ததால், அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. "நானும் தீர்ப்பளிக்கவில்லை" (யோவான் 8:11) என்று இயேசு கூறியபோது, அவர் கண்களில் தெரிந்த கனிவை, அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருளடையாளத்தில் வெளிப்படுத்தவேண்டும்.

'போதிப்பதன் வழியே நெருங்கியிருத்தல்': பேதுரு வழங்கிய முதல் மறையுரையை சிந்தித்துப் பார்க்கலாம். அவரது போதனையைக் கேட்ட மக்கள் 'உள்ளம் குத்தப்பட்டவர்களாய்' உணர்ந்தனர். "நாங்கள் என்ன செய்யவேண்டும்?" (தி.தூ.பணிகள் 2:37) என்று கேட்டனர்.

அருள்பணியாளர் மறையுரை வழங்கும்போது, செபத்தின் வழியே அவர் எவ்வளவு தூரம் இறைவனுடன் நெருங்கியிருக்கிறார் என்பதையும், வாழ்வின் வழியே எவ்வளவு தூரம் மக்களுடன் நெருங்கியுள்ளார் என்பதையும் உணரலாம்.

மக்களுடன் நெருங்கியிருக்கும் அருள்பணியாளர், நல்ல ஆயனைப்போல், மக்களுடன் செல்கிறார். சில வேளைகளில் முன்னே நடக்கிறார்; வேறு சில வேளைகளில் உடன் நடக்கிறார், அல்லது, அவர்களுக்குப் பின்னே நடக்கிறார்.

'நெருக்கத்தின் அன்னை'யான மரியாவிடம் செபிப்போம். நாம் ஒருவர் ஒருவருடன் நெருங்கியிருக்கவும், மக்களுடன் நெருங்கியிருக்கவும், அவற்றின் வழியே, இயேசுவுடன் என்றென்றும் நெருங்கியிருக்கவும், அன்னை மரியா உதவுவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.